Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரபிரதேசத்தில் கொடூரம்; மந்திரவாதியின் பேச்சை கேட்டு பேரனை நரபலி கொடுத்த தாத்தா: தலை, உடல் துண்டு துண்டாக வெட்டி ஓடையில் வீச்சு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி. இவரது மகன் பியூஷ் (17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த காமினி, பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து பியூஷை தேடி வந்தனர். அங்குள்ள ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று தலையை மீட்டனர். பின்னர் அதே ஓடையின் வெவ்வேறு பகுதிகளில் கிடந்த மற்ற உடல் பாகங்களையும் கைப்பற்றினர். அனைத்தையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தபோது, மாயமான பியூஷ் என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் யாரோ ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் துணியால் சுற்றப்பட்ட எதையோ அந்த ஓடையில் வீசி சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, அதே பகுதியை சேர்ந்த சரண்சிங் என்பவரை போலீசார் தேடினர். அவரது தம்பியின் பேரன்தான் பியூஷ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கியிருந்த சரண்சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்பு கொண்டார். பின்னர் போலீசாரிடம் அவர் கூறியதாவது: எனது மகன் கடந்த 2023ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்தாண்டு எனது மகளும் தற்கொலை செய்து கொண்டார்.

எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர். அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன். அவர், உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளது. அவனை கொன்று விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். அவரது ஆலோசனைப்படி பியூஷை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூஷை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசினேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சரண்சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.