மதுரை: மனித உறுப்புகளை பொருட்கள்போல் விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கிட்னி விற்ற விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; மனித உறுப்புகளை பொருட்கள்போல் விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல என நீதிபதிகள்; நோயாளிகளின் உறுப்புகளை மருத்துவர் தனது சொந்த தேவைகளுக்கு விற்பது கொடூரமானது.
கிட்னி எப்பொழுது திருடப்பட்டது என்பது கூட தெரியாமல் வாழ்வது எவ்வளவு பெரிய வேதனை. ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் தெரிவித்தனர். கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். சுகாதாரத்துறை செயலர், ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநரை நீதிமன்றம் வழக்கில் சேர்த்தது.