மனித உறுப்புகளை பொருட்கள் போல விற்பது ஏற்கத்தக்கதல்ல கிட்னி விற்பனை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை: கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்ய பொது நல மனு: நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி நடந்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் ஈடுபட்டுள்ள பல ஏழைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சுரண்டப்பட்டு, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் நிதிப் போராட்டத்தை அறிந்த இடைத்தரகர்கள், சிறுநீரக தானத்திற்கு ரூ.5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை தயார் செய்கின்றனர். இது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994ஐ முற்றிலும் மீறுகிறது. மேலும் மனித உறுப்புகளில் வணிக ரீதியான பரிவர்த்தனைக்கு தண்டனையையும் வழங்குகிறது. இதேபோல் திருச்சி மற்றும் பெரம்பலூரிலும் இந்த குற்றச்சாட்டு உள்ளது. இங்கு நடந்த மோசடி குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்திடும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர், ‘‘சட்டவிரோதமாக மனித உடலுறுப்புகள் சில மருத்துவமனைகளில் திருடப்பட்டதாக தெரிய வந்துள்ளதே? நோயாளிகளின் உடல் உறுப்புகளை மருத்துவர் எடுத்து தனது சொந்த தேவைகளுக்காக விற்பனை செய்வது கொடூரமானது. ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை. மனித உடலுறுப்புகளை பிற பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல’’ என்றனர்.
மனுதாரர் தரப்பில், ‘‘சிறுநீரக விற்பனை தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. 6 பேர் தானமாக வழங்கியதாக கூறப்பட்ட நிலையில் 5 பேர் அந்த ஊர்களில் இல்லை. அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் தினசரி பொது தளங்களில் பகிரப்படுகிறது.
இருந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தகவல் தெரிந்தவுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை? ஏழை, எளிய குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் கிட்னி எப்பொழுது திருடப்பட்டது என்பது கூட தெரியாமல் வாழ்வது எவ்வளவு பெரிய வேதனை.
எனவே, இந்த மனுவில் சுகாதாரத்துறை முதன்மை செயலர், சுகாதாரப் பணிகள் இயக்குனர் ஆகியோரை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. கிட்னி விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இதுபோல மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 21க்கு (நாளை) தள்ளி வைத்தனர்.