Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் அருகே அரசு துவக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு: போலீஸ்காரரின் 2 சகோதரர்கள் உள்பட 3 பேர் சிக்கினர்

திருவாரூர்: திருவாரூர் காரியாங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக அன்புச்செல்வி உள்ளார். கடந்த 11ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பள்ளி முடிந்த பின்னர் வழக்கம்போல் மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். 2 நாள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் காலை உணவு திட்டத்திற்காக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது சமையலறை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மாணவர்களின் குடிநீர் தொட்டியின் மூடியும் திறந்து கிடந்து உள்ளது. சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், குடிநீர் தொட்டியின் உள்ளே பார்த்த போது, மனித கழிவுகள் மிதந்தை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் (பொ) அன்புச்செல்வி தகவலின் பேரில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், தாலுகா போலீசார் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து குரைத்ததோடு அங்கேயே படுத்துக்கொண்டது. சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீட்டில் வசித்து வரும் செல்வம் மகன்களான விஜயராஜ் (32), விமல்ராஜ் (30) மற்றும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமார் (35) ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதை பயன்படுத்தி 3 பேரும், பள்ளியின் கேட் ஏறி குதித்து உள்ளே சென்று சமையலறையின் பூட்டை உடைத்து பொருட்களை எடுத்துள்ளனர். மேலும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளனர். பள்ளிக்கு உள்ளேயே மது அருந்தி உள்ளனர். விமல்ராஜ் வெல்டிங் பட்டறை நடத்தி வருவதால் அங்கிருந்து கூண்டை எடுத்து வந்து பள்ளி வளாகத்தில் வைத்து அதில் சிக்கிய கோழியையும், மீண்டும் கூண்டை வைத்தபோது அதில் சிக்கிய கீரிப்பிள்ளையையும் போதையில் சமைத்து சாப்பிட்டு உள்ளனர். போதை தலைக்கேறியதால், குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்துள்னர். இதில் விஜயராஜ், விமல்ராஜ் ஆகியோர் திருவாரூர் டிஎஸ்பி அலுவலக போலீஸ்காரர் ஒருவரின் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது என்றனர்.

இது தொடர்பாக கலெக்டர் மோகன் சந்திரன் கூறுகையில், பள்ளியில் நடைபெற்ற சம்பவத்திற்கு காரணமான நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்தது அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.