ஏடன்: ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் நீடிக்கிறது. ஹமாஸ் படையினருக்கு ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானின் ஹிஸ்புல்லா படையினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் இஸ்ரேல் மீதும் டிரோன்கள், ஏவுகணைகளை வீசி ஹவுதி படை தாக்குதல் நடத்துவதும், இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் நீடிக்கிறது.
அதன்ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை(9ம் தேதி) இஸ்ரேல் மீது ஹவுதி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் இஸ்ரேலின் கடும் வான்பாதுகாப்பு தடுப்புகளை மீறி, தெற்கு இஸ்ரேலிய விமான நிலையத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமான நிலைய கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கி ஒருவர் காயமடைந்தார். ஹவுதியின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை(10ம் தேதி) ஏமன் தலைநகர் சானாவில் உள்ள ஹவுதிகளின் ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆனால் குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் தாக்கியதாக ஹவுதி குற்றம்சாட்டி உள்ளது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள், 11 பெண்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் 11 பேர் உள்பட 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 165க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.