வீட்டுவசதி வாரியத்தில் மாத தவணை தொகை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி தள்ளுபடி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: சட்டப் பேரவையில் வீட்டு வசதி வாரிய மானிக் கோரிக்கையின் போது கடந்த ஏப்ரல் 7ம் தேதி அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், 2015 மார்ச் 31க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு, மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில், ஒவ்வொரு ஆண்டுக்கு 5 மாதத்துக்கு உண்டான வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை 2026 மார்ச் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இனங்களில் ஒதுக்கீடுதாரர்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ள இயலும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீடு, மனை, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 2026 மார்ச் 31 வரை விற்பனை பத்திரம் பெறாமல் 14,126 பேர் உள்ளனர். இதில் மாத தவணை முடிந்து வட்டி சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் 8,204 பேர் உள்ளனர். இந்த தள்ளுபடி திட்டத்தை பயன்படுத்தி எல்லா ஒதுக்கீட்டுதார்களும் விற்பனைப் பத்திரம் பெறுவதன் மூலம் ரூ.164.56 கோடி வாரியத்துக்கு வருவாய் கிடைக்கும். மேலும் ஒதுக்கீட்டாளர்களுக்கு ரூ.50.60 கோடி வட்டி தள்ளுபடி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.