ரபாத்: மொராக்கோவின் மிக பழமையான நகரங்களில் ஒன்றாகவும், சுற்றுலா தலமாகவும் பெஸ் உள்ளது. இந்த நகரம் மக்கள் தொகை அதிகம் கொண்டதாகும். இங்கு விரிசல்களை கொண்ட ஏராளமான பழைய கட்டடங்கள் உள்ளன. இந்நிலையில் பெஸ் நகரின் அல்-மசிரா என்ற பகுதியில், அடுத்தடுத்து இருந்த தலா 4 மாடிகள் உள்ள 2 குடியிருப்பு கட்டடங்கள் நேற்று முன்தினம் இரவு, திடீரென இடிந்து விழுந்தன. இதில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 16 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள், போலீசார், சிவில் பாதுகாப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தொடங்கின.
நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தது. அந்த பகுதியின் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்த குடும்பங்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டன. அவர்களுக்கு நேற்று மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பழமையான இந்த கட்டிடங்களில், சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால்தான் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது’ என்றனர். இது இந்தாண்டின் 3வது கட்டிட விபத்தாகும்.


