சென்னை: சென்னை மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச் சேகரித்து அகற்றுவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்தச் சிறப்புச் சேவையின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரச்சாமான்கள் (சோபா, படுக்கைகள்), துணிகள் மற்றும் பழைய மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட பெருமளவிலான குப்பை அகற்ற முடியும்.
இந்த சேவை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. வீட்டிலிருக்கும் பழைய பொருட்களை இனி எளிதாக அகற்றலாம். நாற்காலிகள், படுக்கைகள், மேசைகள் போன்ற பெரிய பொருட்களை, ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு கழிவு சேகரிப்பு சேவையின் மூலம் பாதுகாப்பாக ஒப்படைக்கலாம்.
இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர், 1913 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9445061913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அல்லது கோரிக்கையைப் பதிவு செய்யலாம் அல்லது நம்ம சென்னை செயலியில் பதிவு செய்ய வேண்டும். உங்கள் கோரிக்கை சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
குறிப்பிட்ட நாளில் உங்கள் வீட்டிற்கு வரும் மாநகராட்சி வாகனங்களில் உங்கள் பழைய சோபா, படுக்கைகள், துணிகள் மற்றும் மின்னணு கழிவுகளைச் சேகரித்துக் கொடுக்கலாம். சென்னை மாநகராட்சியின் இந்தச் சேவை சனி கிழமைகளில் மட்டுமே கிடைக்கும். சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாநகராட்சியால் பாதுகாப்பாக எரிக்கப்படும்.