Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனல் பறக்கும்

பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி துவங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா உள்பட 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து நீதிபதிகள் பதவிநீக்கம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய வருமான வரி சட்டத்திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாகம், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஆகிய திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன.  அத்துடன், மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி, தொழில் முனைவோர் செய்யும் தவறுகளுக்கான தண்டனை ஆகிய திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

மேலும், இந்திய மேலாண்மை நிறுவனம், இந்திய துறைமுக மசோதா உள்பட 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இக்கூட்டத்தொடரில், திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

இதில், ‘‘தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்திற்காகவும் வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள், உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்றும், கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழர்களுக்கு எதிரான பண்பாட்டு ஊடுருவலை நிகழ்த்தும் ஒன்றிய பா.ஜ., அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுதியாகவும், நமக்கான உரிமைக்குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மும்மொழி கொள்கையை திணித்து, பின்னர் மகாராஷ்டிரா மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து, ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நேர் எதிரான போக்கை கடைபிடிக்கிறது. பா.ஜ ஆளும் மாநிலம் என்பதால், எஸ்.எஸ்.ஏ நிதியையும் விடுவித்துள்ளது. ‘மகாராஷ்டிராவுக்கு நியாயம்; தமிழ்நாட்டுக்கு அநியாயம்’ என்கிற மாற்றாந்தாய் மனப்பான்மையை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது.

கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாமல் இருப்பது போன்ற ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப தயாராகி விட்டனர்.  திமுக மட்டுமின்றி, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்த பணி என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையை பறிப்பது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது உள்ளிட்டவை குறித்து இதர எதிர்கட்சிகளும் ஓரணியில் திரளுகின்றன.

இதற்கு ஏற்ப காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. எனவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.