Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த ஆண் நண்பர் சிக்கினார்: டெல்லியில் சுற்றிவளைப்பு

ஓசூர்: ஓசூர் அருகே தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த முக்கிய குற்றவாளியை டெல்லியில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், பெண் ஊழியர்களுக்காக லாலிக்கல் பகுதியில் தொழிற்சாலை சார்பில் அடுக்குமாடி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 6,250 ஊழியர்கள் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள ஒரு அறையில் இருந்த குளியலறையில் ரகசிய கேமரா இருந்ததை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து, கடந்த 4ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்ததில், ரகசிய கேமரா பொருத்தியது அதே விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், உறவினரும், நண்பருமான ரவி பிரதாப்சிங் (29) என்பவர் கேமரா வைக்க சொன்னதாக கூறினார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் பெங்களூருவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பி ஓடினார்.

இதையடுத்து, தனிப்படை போலீசார் விமானம் மூலம் சென்று தேடினர். இதனிடையே ரவி பிரதாப்சிங் டெல்லியில் பதுங்கியிருப்பதாக தகவலறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று நேற்று முன்தினம் இரவு அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக நேற்று அதிகாலை பெங்களூருக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு நேற்று காலை ரவிபிரதாப்சிங்கை அழைத்து வந்தனர். அங்கு, எஸ்பி தங்கதுரை தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கேமராவை எதற்காக பொருத்தினார். அதை இயக்க கூடிய டிவைஸ் எங்கு வைக்கப்பட்டது. அதன் மூலம் வீடியோக்கள் எதுவும் எடுக்கப்பட்டதா? யாருக்காவது பகிரப்பட்டதா என தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பினர்.