* ஆண் நண்பரை பிடிக்க போலீஸ் பெங்களூரு விரைவு, ஊழியர்கள் போராட்டத்தால் போலீஸ் குவிப்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக லாளிக்கல் என்ற பகுதியில், தனியார் தொழிற்சாலை சார்பில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு 8 பிளாக்கில் 11 அடுக்குகள் கொண்ட விடுதி உள்ளது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் பெண்களின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறி, நேற்று முன்தினம் இரவு, விடுதியில் தங்கியிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விடுதி முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி நீலுகுமாரி குப்தா(22) என்பவர், குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தியதும், அவரது ஆண் நண்பர் ஒருவர் கூறியதன் பேரில், அவர் ரகசிய கேமரா பொருத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து உத்தனப்பள்ளி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள அவரை பிடிப்பதற்காக, தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றுள்ளனர்.
விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய தகவல் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர்கள் விடுதியின் முன்பு திரண்டனர். விடுதியில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக கூறி, விடுதியில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், விடுதி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏடிஎஸ்பி சங்கர் கூறுகையில், ‘கேமராவை பொருத்திய 30 நிமிடத்தில், அதை கண்டுபிடித்ததால், வீடியோ எதும் பதிவாகவில்லை, மற்ற அறைகளில் உள்ள குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீசாரை வரவழைத்து, 10 குழுக்கள் கொண்ட 100 போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
