ஓசூர் அருகே தொழில் நஷ்டத்தை சமாளிக்க பணம் பறிக்க முயற்சி ரூ.2 கோடி கேட்டு தர மறுத்ததால் 2 தொழிலதிபர்கள் கொடூர கொலை: போலீஸ்காரரை தாக்கி தப்ப முயன்றவர் சுட்டுப்பிடிப்பு
ஓசூர்: ஓசூர் அருகே தொழில் நஷ்டத்தை சமாளிக்க பணம் பறிக்க முயன்று, ரூ.2 கோடி கேட்டு தர மறுத்ததால் 2 தொழிலதிபர்களை கொடூர கொலை செய்த கொலையாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான பொம்மசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ரவி பிரசாத்ரெட்டி(35). இவர் அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளார். அந்த தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், பணம் அதிகமாக தேவைப்பட்ட நிலையில், வசதி படைத்தவர்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 4ம் தேதி கித்தனஹள்ளி என்னுமிடத்திற்கு சென்ற ரவி பிரசாத்ரெட்டி, தெரிந்த நபரான ஓட்டல் அதிபர் மாதேஷ் என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரவி பிரசாத்ரெட்டி, அவரை அடித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஹெப்பகோடி போலீசார் விசாரணை நடத்தி, ரவி பிரசாத்ரெட்டியை தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவி பிரசாத்ரெட்டி, கடந்த 6ம் தேதி, ஜிகினி உள்வட்ட சாலை பகுதியில் தொழிலதிபர் பாலப்பா ரெட்டி என்பவரை கடத்திச்சென்றார். பின்னர், வேறொரு செல்போனில் இருந்து தொழிலதிபரின் குடும்பத்தாரிடம், ரூ.2 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். அவர்கள் பணம் கொடுக்க முன்வராத நிலையில், பாலப்பாரெட்டியை 2 நாட்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்து, தமிழக எல்லையான ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் உடலை வீசி விட்டுச் சென்றார்.
இதுதொடர்பாக ஹெப்பகோடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான விவரங்களின் அடிப்படையில், ரவி பிரசாத்ரெட்டி கொலை செய்தது உறுதியானது. மேலும், மாதேஷ் மற்றும் பாலப்பா ரெட்டி ஆகிய இருவரையும், பணத்துக்காக ரவி பிரசாத்ரெட்டி கொலை செய்ததும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரசாத்ரெட்டி, பல ஆண்டுகளாக கர்நாடகாவில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில், அவர் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கர்நாடகா போலீசார் நேற்று அதிகாலை அவரை கைது செய்தனர். தொடர்ந்து பாலப்பா ரெட்டியை கொலை செய்து வீசிய இடத்திற்கு, அவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர். பின்னர், வாகனத்தில் ஏற்றிக் கொண்டு காவல்நிலையத்திற்கு புறப்பட்டனர். பொம்மனஹள்ளி என்னுமிடத்தில், மயானத்தை ஒட்டியுள்ள சாலையில் சென்ற போது, திடீரென ரவி பிரசாத்ரெட்டி, போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பிடிக்க முயன்ற தலைமை காவலர் அசோக், ரவி பிரசாத்ரெட்டி தாக்கியதில் காயமடைந்தார்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சோமசேகர், எச்சரிக்கை விடுக்கும் வகையில் 2 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால், ரவி பிரசாத்ரெட்டி தொடர்ந்து போலீசாரை தாக்கி தப்ப முயன்றார். இதனால், அவரது 2 கால்களிலும் போலீசார் சுட்டனர். இதில், படுகாயமடைந்த ரவி பிரசாத்ரெட்டி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து, போலீசார் அவரை ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர் ஏற்கனவே வேறு விஐபிக்கள் யாரையேனும் கடத்தி பணம் பறித்துள்ளாரா? அவரது கூட்டாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

