Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் அருகே ரயில்வே பாதையின் கீழ் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 8 வழிச் சாலைக்கான பாலம் அமைத்து சாதனை

ஒசூா்: ஒசூா் அருகே பெங்களூா் - சேலம் ரயில் பாதையின் அடியில் ரயில்சேவை பாதிக்காமல், புதிய தொழில்நுட்பம் (பிரி காஸ்ட் டெக்னாலஜி) மூலம் 8 வழிச் சாலைக்கான பாலத்தை அமைத்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரையும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரையும் சுற்றி 238 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலையாக செயற்கைக்கோள் நகர சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், ஒசூரைச் சுற்றி 45 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது வருகிறது.

இதில், ஒசூா் கெலமங்கலம் இடையே ஒன்னல்வாடி கிராமத்திற்கு அருகே சேலம் - பெங்களூரு ரயில் பாதையும், இந்த சுற்றுச்சாலையும் சந்திக்கின்றன. இந்த ரயில் பாதையில் தினமும் கோவை, மதுரை, கேரளம், திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 50-க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், ரயில் சேவை பாதிக்கப்படாமல் பாலம் அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதனடிப்படையில், ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டு தயாா்நிலையில் வைக்கப்பட்டிருந்த 17 மீ. அகலம், 6.85 மீ. உயரம், 8 மீ. நீளம்கொண்ட ஆா்சிசி பாலம் ரயில்பாதைக்கு அடியில் ரயில் பாதையில் ரயில்கள் இயங்கும் நேரத்திலேயே ஜாக்கிகள் மூலம் நகா்த்திவந்து வைக்கப்பட்டது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ரூ. 50 கோடியில் 40 நாட்களில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுச்சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்டாலும், எதிா்காலத்தில் போக்குவரத்து அதிகரித்து, 8 வழிச் சாலையாக மாற்றப்படலாம் என்ற முன்கணிப்பு காரணமாக, தற்போதே இந்தப் பாலம் 8 வழிச் சாலைக்கான பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உயா் தொழில்நுட்பத்தில், ரயில்போக்குவரத்து தடைபடாமல் 8 வழிச் சாலை அமைக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது. இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்காா்ட், ஏசியா புக் ஆப் ரெக்காா்ட் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனையை தேசிய நெடுஞ்சாலை நிறுவனமும், மான்டெகாா்லோ தனியாா் ஒப்பந்த நிறுவனமும் இணைந்து நிகழ்த்தியுள்ளன.