*வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஓசூர் : ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கனரக வாகனங்களையும், இலகுராக வாகனங்களையும் பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்பவர்கள், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் தொழில் முனைவோர்கள், அதிகாரிகள் செல்லும் இலகுராக வாகனங்கள், கனரக வாகனங்கள் சீதாராம் மேட்டுப்பகுதியில் ஒன்றாக இணைந்து செல்கின்றன.
இலகுராக வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள் ஒன்றாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையான பத்தலப்பள்ளியில் இலகுரக வாகனங்களை ஒரு சாலையிலும், கனரக வாகனங்களை இருபுறம் உள்ள சாலைகளிலும் செல்ல அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுளுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஓசூர் பழைய நகராட்சி எதிரில் உள்ள மேம்பாலத்தில் இணைப்பு பகுதியின் பாட் பேரிங் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், வாகனங்கள் சர்வீஸ் சாலை, ரிங்ரோடு வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், சீதாராம் மேட்டு பகுதியில் அதிகாலை, மாலை நேரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பத்தலப்பள்ளி அருகே இலகுரக வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சாலையில் பிரித்து அனுப்ப வேண்டும்.
சீதாராம் மேட்டுப்பகுதியில், அதிகாலை நேரத்தில் வாகன நேரிசல் ஏற்படும்போது தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி -கல்லூரிகளின் வாகனங்கள் நெரிச்சலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, பத்தலபள்ளி அருகே கனரக வாகனங்களையும், இலகுராக வாகனங்களையும் பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.