ஓசூர்: ஓசூர் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓசூர் அருகே நல்லக்கானகோத்தபள்ளி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஸ்வீதா பானு இவரது மகன் 15 வயதுள்ள சமீர். இருவரும் தினந்தோறும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலை ஓரத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் நல்லக்கானகோத்தபள்ளி அட்டகுறுக்கி பகுதிக்கு இடையிலான சாலை ஓரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் கிரிஷ்ணகிரியிலிருந்து கேரளாவை சேர்ந்தவர் அவரது குடும்பத்தினருடன் ஓசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தாய், மகன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். விபத்துக் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் உடனடியாக இருவரது உடலை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல் காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.