பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் காசா முழுமையாக அழிக்கப்படும்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை; தீவிர தரைவழி தாக்குதல் தொடங்கப்பட்டது
ஜெருசலேம்: காசா நகரில் தீவிர தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கிய நிலையில், ஆயுதங்களை கீழே போட்டு, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் காசா முழுமையாக அழிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் எச்சரித்துள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில் ஹமாஸ் தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அரபு-முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக அரபு-முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
இந்த சூழலில், காசாவின் முக்கிய நகரமான காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக காசா நகரில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களை தாக்கி அழித்த நிலையில், காசா நகரம் பாதுகாப்பற்ற பகுதியாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. இதனால் உடனடியாக அங்குள்ள மக்கள் தெற்கு பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகள் உடைமைகளுடன் வாகனங்களிலும், நடந்தபடியும் நீண்ட வரிசையாக முகாம்களை நோக்கி செல்கின்றனர். ஏற்கனவே அந்த முகாம்களில் தங்க இடவசதி இல்லாததால் சிலர் காசா நகரத்திலேயே தொடர்ந்து தங்கி உள்ளனர். இந்த நிலையில், போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மூலமாகவும் தரைவழியாகவும் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்த தீவிர தாக்குதலில் 78 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் குண்டுவீச்சில் சேதப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் சிக்கியிருக்கும் தங்கள் உறவினர்களை மீட்க முடியாமல் பலரும் கதறுகின்றனர். தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல்கள் நடப்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி மேற்கொள்வது கடினமாக இருப்பதாக கூறி உள்ளனர். இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இஸ்ரேல் பயணம் மேற்கொண்டு அங்கிருந்து கத்தாருக்கு சென்றுள்ளார்.
இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட போது பேட்டி அளித்த ரூபியோ, ‘‘காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி விட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு மிக குறைந்த அவகாசமே உள்ளது” என்றார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அளித்த பேட்டியில், ‘‘காசா நகரம் தீப்பற்றி எரிகிறது. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டு, பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் ஒட்டுமொத்த காசாவும் அழிக்கப்படும்’’ என கூறி உள்ளார்.