Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருந்தோம்பல்... நேற்றும் இன்றும்!

விருந்தோம்பல் என்பது ஒரு கலை. அது நம் நாட்டுக்கே உரியது. அது தமிழரின் ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது. விருந்தோம்பலை ஒரு அறம் என்றே நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இல்வாழ்க்கையில் இந்த அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் தெய்வப்புலர் திருவள்ளுவர். நாம் ஒருவருக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை கிடைக்க வழி செய்வோமானால் நமது இல்வாழ்க்கை சிறப்பாக அமையும் என கூறுகிறார் அவர். விருந்தோம்பல் நம் நாட்டின் பண்டைக்காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கமாக இருக்கிறது. ‘‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து'' என்ற குறளில் அதை விருந்தோம்பல் குறித்து தெளிவாகக் கூறி இருக்கிறார். அதாவது அனிச்சமலர் முகர்ந்து பார்த்த உடனேயே வாடிவிடுமாம். அதுபோலதான், நமது முகம் மாறி இருந்தால் விருந்தினர் நமது மனநிலை குறித்து தெரிந்து கொள்வார்கள் என்கிறார் வள்ளுவர்.

அந்தக் காலத்தில் வீடுகளில், வீட்டு வாசலில் திண்ணை வைத்து கட்டும் பழக்கம் தமிழர்களிடம் வெகுவாக இருந்தது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும், உறவினர்களையும் அடுப்பங்கரை வரையிலும் அழைத்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்கு வகை வகையாக சமைத்துக் கொடுத்து உபசரிப்பார்கள்.

விருந்தினராகவோ, உறவினராகவோ இல்லாமல் சாதாரணமாக தெரிந்தவர்களாக இருந்தால் வீட்டினுள்ளே வராண்டா வரையில் வரவழைத்து உபசரிப்பார்கள். முகம் தெரியாதவர்கள் வந்தால் அவர்களை விரட்டுவது கிடையாது. அவர்களையும் வரவேற்று, வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர வைத்து, தங்களது வீட்டில் சமைத்த உணவைக் கொடுத்து உபசரிப்பார்கள். இது நமது தமிழ்ச் சமூகம் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் மரபு.ஆனால் இன்றைய காலகட்டத்தில் திண்ணையில் கொடுப்பது பெரும்பாலும் சாத்தியப்படாது. இப்போது திண்ணை என்பது கிராமப் புறங்களில் கூட சில வீடுகளில் மட்டுமே இருக்கிறது. ஆனாலும் நமது விருந்தோம்பல் மரபு தொடர்ந்தபடிதான் இருக்கிறது. நாம் சில வகை உணவுகளை சமைத்து சிலரைத் தேடிப் போய்க் கொடுக்கிறோம். இப்போது வீடுகளில் சமைத்து விருந்தளிக்கா விட்டாலும் உணவகங்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரை அழைத்துச் சென்று விருந்தளிக்கிறோம். சில நிகழ்ச்சிகளை முன்னிட்டும், பதவி உயர்வு, புதிய வேலை உள்ளிட்ட சமயங்களில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழ்கிறோம். அந்த சமயங்களில் அவரவர் வசதிக்கேற்ப ஃபைவ் ஸ்டார், த்ரீ ஸ்டார், சாதாரண நடுநிலையான ஹோட்டல்களில் பார்ட்டி எனும்பெயரில் இன்னும் நமது விருந்தோம்பலை தொடர்கிறோம்.

விருந்தினர் நமது வீட்டிற்கு வரும்போது, அவர்கள் முன்பு கணவன் - மனைவி சண்டையிட்டுக் கொள்வது, நம் பிள்ளைகளை அவர்கள் பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது, டிவி தொடர் பார்த்துக் கொண்டு ஏனோ தானோவென்று பேசுவது போன்ற அநாகரிகமான செயல்கள் புரிதல் கூடாது. விருந்தினர் நம் வீட்டில் தங்கிவிட்டுச் செல்லும் நாட்கள் வரை அக்கறை கலந்த அன்போடு கவனிக்க வேண்டும் எனவும் நமது முன்னோர் நமக்கு வலியுறுத்தி இருக்கிறார்கள்.இன்றைய அவசர யுகத்தில் நின்று பேசவும், நலம் விசாரிக்கவும் கூட சூழல்கள் வாய்ப்பது இல்லை. இத்தகைய காலகட்டத்தில் விருந்தோம்பல் என்பது மறந்து போன ஒரு சொல்லாகவும் மாற வாய்ப்புகள் ஏற்படுகின்றன. முற்காலத்திலோ விருந்தோம்பலுக்கு யாரும் வராத நிலைதான் கவலை அளிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் கண்ணகிக்கு இல்லறத்தின் தலையாய அறமான விருந்தோம்பும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாம். `அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடனும் இழந்த என்னை’ என்று கண்ணகி தன் மனதில் எண்ணி வருந்துவதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இது அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. இதை நாம் அனைவரும் உணர்ந்து, மறைந்து கொண்டு வரும் விருந்தோம்பலின் சிறப்பை நாம் மறந்து விடாமல் கடைபிடிப்போம். நமது வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு விருந்தளிப்போம். நம் தமிழ் மரபின் தொடர்ச்சியாய் வாழ்ந்து காட்டுவோம்!