Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு பிறகு தலைமைசெயலகம் வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரூ.229 கோடியில் மதுரை மத்திய சிறை கட்டிடத்திற்கு அடிக்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு பிறகு நேற்று தலைமை செயலகம் வந்தார். ரூ.229 கோடியில் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டிடங்களுக்கு அடிக்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மாவட்ட கலெக்டர்களிடமும் ஆலோசனை நடத்தி, மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசு பணிகளை மேற்கொண்ட அவர் கட்சி பணிகளையும் கவனித்தார். திமுக மண்டல பொறுப்பாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் கொடுத்து அனுப்பி இருந்தார்.

உடல்நிலை சரியானதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்லவில்லை. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 10.15 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். அவரை மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், சில திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நல பள்ளிகளில் பயின்று, 2025-26ம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்ட பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் போன்றவற்றில் சேர்க்கை பெற்ற 135 மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதையடுத்து, காவல் துறை சார்பில் சென்னை தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், வேலூர் மாவட்ட சேவூர், திருச்சி மற்றும் விருதுநகரில் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் என ரூ.27.59 கோடி செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.13.54 கோடி செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் ரூ.60 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் கோவை, ராமநாதபுரத்தில் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.3.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வு பிரிவுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இடநெருக்கடி காரணமாக மதுரை புறநகர் பகுதியான செம்பூர் பகுதிக்கு மாற்றியமைக்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.229 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள மத்திய சிறை, 113 சிறைக்காவலர் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் மதில் சுவர் ஆகியவற்றிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

* 40 பேருக்கு பணி நியமன ஆணை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 39 பேருக்கும், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் கருணை அடிப்படையில் கிருஷ்ணவேணி என்பவவருக்கும் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025’ஐ வெளியிட்டார். இதை தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.27.4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாநில வரி அலுவலக கட்டிடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இரண்டு புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

* முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தருகிறது

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: நலம்பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினேன்.

மிகவும் பின்தங்கிய - துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்வி பயணத்தையும் - கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன். கல்விதான் உண்மையான பெருமையை தேடித் தரும் என உயர்படிப்புகளுக்கு சென்றுள்ள இவர்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படி கல்வியால் - உழைப்பால் முன்னேறி சாதனை படைப்பவர்களைத்தான் தமிழ்ச்சமூகம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.