Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தோப்புத்துறை பள்ளியில் அரிய வகை தாவரங்கள் பறவைகளின் புகைப்பட கண்காட்சி: மாணவர்கள் கண்டு ரசித்தனர்

வேதாரண்யம்: வேதாரண்யம் கோடியக்கரை வனச்சரகம், தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சார்பில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்கணக்கு உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் அரிய தாவர வகைகளின் புகைப்படங்கள், இவற்றின் தமிழ்ப்பெயர், ஆங்கிலப்பெயர், தாவரவியல் பெயர்கள் ஆகிய விபரங்களுடன் கூடிய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதோடு வெப்ப மண்டல வறண்ட பசுமை மாறா காடுகளுக்கே உரிய மூலிகைத் தாவரங்கள், அவற்றின் தமிழ் மற்றும் தாவரவியல் பெயர்களுடன் கூடிய படங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. உலகின் பல்வேறு திசைகளில் இருந்தும் கோடியக்கரைக்கு வலசை வரும் அரிய பறவைகளின் படங்கள், அவற்றின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களுடன் கூடிய படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

350க்கும் மேற்பட்ட அரிய உயிரின இனங்களின் படக் கண்காட்சியினை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கண்டு மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் (பொ) கவிநிலவன், உதவித் தலைமை ஆசிரியை ஆனந்தி, பள்ளி பசுமைப் படை பொறுப்பாசிரியர்கள் கண்ணையன், ரெங்கசாமி, உடற்கல்வி ஆசிரியர் பொய்யாமொழி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், வனத்துறை சார்பில் வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனவர் இளஞ்செழியன் மற்றும் வனப் பணியாளர்கள் செய்தனர்.