திருமலை: ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் கணபதி பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் வழக்கமாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. மதிய வேளையில் திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது.
வெடித்த சிறிதுநேரத்திலேயே தொழிற்சாலை முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 6 பணியாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.