மங்களூரூ: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி விரிவுரையாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மங்களூரு அடுத்த மூடபித்ரி அருகே தனியார் கல்லூரி செயல்படுகிறது. இங்கு இயற்பியல் விரிவுரையாளராக நரேந்திரா, உயிரியல் விரிவுரையாளராக சந்தீப் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களது நண்பர் அனூப். இக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு, பாடத்தின் குறிப்புகள் கொடுப்பதாக கூறி, விரிவுரையாளர் நரேந்திரா பழகியுள்ளார். இதையொட்டி நரேந்திரா, மாணவியை பெங்களூரில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி இருக்கின்றனர்
இந்த சம்பவத்தை அறிந்த உயிரியல் விரிவுரையாளர் சந்தீப், , சில நாட்களுக்கு பிறகு, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, நரேந்திரனுடன் நீ இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ என்னிடம் இருக்கிறது என கூறி மாணவியை மிரட்டினார். மேலும், அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கல்லூரியில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துவதாக கூறினார். இதனால் பயந்துபோன மாணவியை, அனூப்பின் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
அப்போது அங்கிருந்த அனூப், மாணவியை கட்டாயப்படுத்தினார். மேலும், என் அறையில் சிசிடிவி உள்ளது, நீ எனது அறைக்கு வந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது என மிரட்டி, அவரும் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் மனமுடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மராத்தி ஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இயற்பியல் மற்றும் உயிரியல் விரிவுரையாளர்கள், அவர்களது நண்பர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.