கோவை: தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் 41 பேர் பலியான சம்பவம், ஒரு துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில், சமூக வலைதளங்களில் வரக்கூடிய கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என நீதிபதி கூறி இருக்கிறார். இன்னும் யார் தவறு செய்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. முன்ஜாமீன் மனுவை நிராகரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது. நீதிபதிகளின் கருத்துக்களை யாரும் அரசியலாக வேண்டாம். இது, என்னுடைய வேண்டுகோள். கரூர் விஷயத்தை பொருத்தவரை விஜய் மீது வழக்கு போட்டால் வழக்கு நிற்காது. அரசியல் ஆசைக்காக கைது செய்து ஒரு இரவு சிறையில் வைக்கலாம். அடுத்த நாள் வெளியில் வந்து விடுவார்.
அதிகாரிகள் ஆரம்பித்து, தவெக அடிமட்ட தொண்டர்கள் யாராவது இருந்தாலும் கூட, தவறு செய்து இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம். தவெக மீது தவறுகள் இருக்கிறதா என்று என்னை கேட்டால் நிச்சயம் இருக்கிறது. தவெகவை பாதுகாக்க வேண்டிய கடமை பாஜவுக்கு இல்லை. அஸ்ரா கார்க் நல்ல ஒரு நேர்மையான அதிகாரி. அவரின் தலைமையில் எஸ்ஐடி அமைக்கப்பட்டு உள்ளது. முழுமையான விசாரணை இதில் நடைபெற வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. எஸ்ஐடி மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்கள் முடிவு செய்யட்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் யார் வேண்டுமானாலும் எஸ்ஐடி முடிவு வந்ததற்கு பிறகு சிபிஐ கேட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.