சென்னை: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது: அக்டோபர் 17ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டார். அதில், தமிழகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் விதத்தில், அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷாவின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.பழனிகுமார், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ராமநாதன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கமிஷனை அமைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த கமிஷன், ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். அதை பரிந்துரைகளாக வடிவமைக்க வேண்டும்.
மேலும், ஆணவக் கொலைகள் தொடர்பான அரசியல் சாசனம், தற்போதுள்ள சட்டங்கள், ஆணைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ள கொள்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, இதுபோன்ற கொலைகளுக்கு எதிரான சட்ட வடிவமைப்பை உருவாக்க வேண்டும். இந்த பணிகளை ஒருங்கிணைத்து அறிக்கையாக அரசுக்கு இன்னும் 3 மாதத்திற்குள் அளிக்க வேண்டும்.
