சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய, மாநில அரசுகள் ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் இயங்கும் சிறப்பு புலனாய்வு குழு, கவின் படுகொலை வழக்கை விசாரிக்க வேண்டும்.
ஆணவப் படுகொலைக்கு எதிராக ஒன்றிய அரசு தான் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் கூட தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரம் உள்ளது. உங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவக் கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடி இயற்ற வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்திலேயே சாதி ஆணவக் கொலையை தடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றால் முற்போக்கு அரசியலை பேசும் தமிழ் மண்ணிலும் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் தேவை. இந்திய ஒன்றிய அரசு தான் தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஆனால் மாநில அரசுக்கும் அதிகாரம் இருக்கும் சூழலில் வேடிக்கை பார்க்க வேண்டாம். மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி துணிந்து இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.