சென்னை: பாளையங்கோட்டை ஆணவ கொலைக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாத செயலாகும்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அரசு இரும்புக்கரம் கொண்டு இத்தகைய கொலை செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கல்வி அறிவியல் உள்ளிட்ட பல வகைகளிலும் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் ஆணவ படுகொலைகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவின்குமார் (28), ஆவண படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளி சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள்.
இந்த தம்பதியின் மகளை காதலித்து வந்ததால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இனி எப்போதும் ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் நிகழா வண்ணம் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.