கவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர்கள் ஆயுஷ் ஷெட்டி, லக்சயா சென், எச்.எஸ்.பிரனாய் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் போட்டிகள், ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, தைவான் வீரர் ஸு லியாங் மோதினர்.
இப்போட்டியின் முதல் இரு செட்களை ஆளுக்கொன்றாக இருவரும் கைப்பற்றினர். 3வது செட்டை ஆயுஷ், எளிதில் வசப்படுத்தினார். அதனால், 15-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் வென்ற ஆயுஷ் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், தைவான் வீரர் வாங் சு வெ மோதினர்.
இப்போட்டியில் 22-20, 16-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்ற லக்சயா சென், 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், சீன வீரர் லு குவாங்சு மோதினர். இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரனாய், 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.