ஹோண்டா மோட்டார் நிறுவனம், இந்தியச்சந்தையில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக திட்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது எலவேட், சிட்டி மற்றும் அமேஸ் கார்கள் மூலம் ஓரளவு சந்தையில் தனது இருப்பை இந்நிறுவனம் நிலை நிறுத்தியுள்ளது. இருப்பினும், சந்தைப் பங்களிப்பை அதிகரிக்க புதிய கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ் கார்களுக்குப் போட்டியாக இவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட முடிவை, ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், நிறுவனத்தின் தலைவரும் முதன்மை செயல் அலுவலருமான தொஷிஹிரோ மிபே உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் 10 புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

