Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஊருக்கெல்லாம் அள்ளி கொடுத்து சொந்த ஊர் நிர்வாகிகளுக்கு கிள்ளி கொடுத்த இலைத் தலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பிளாக் செல்போன் ஊடுருவிய விவகாரத்துல தொடர்புள்ளது கருப்பு ஆடா அல்லது ஆடுகளா என விசாரணையை வலுவாக்கணும்னு சொல்றாங்களாமே தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் சென்ட்ரல் ஜெயில்ல, சிறை காவலருங்க 3 பேரு, மதியம் நேரத்துல தச்சுக்கூடம் பகுதியில கண்காணிப்பு பணியில ஈடுபட்டிருந்தாங்களாம்.. அப்போ, போக்சோ வழக்குல 20 வருஷம் தண்டனை பெற்ற கைதியான சத்துவாச்சேரியை சேர்ந்தவரை சோதனை செஞ்சிருக்காங்க.. அதுல, பிளாக் செல்போனும், பேட்டரி, டேட்டா கேபிள்னு சிக்கியிருக்குது..

சார் இது என்னோடது இல்ல, நெல்லை கொத்தான் குளத்தை சேர்ந்த மர்டர் வழக்கு கைதி கொடுத்தாரு, இது சார்ஜ் போட சொன்னாரு, அதனால போட்டுக்கொடுக்குறேன்னு சொல்லியிருக்குறாரு.. ஜெயில்ல எத்தனை தடை இருந்தாலும், செல்போன், போதை பொருள்னு தடையில்லாம போய்கிட்டுதான் இருக்குதாம்.. அதனால, சிக்குன செல்போன்ல பதிவாகியிருக்குற நம்பரை வெச்சி, ஜெயிலுக்குள்ள இருக்குற கருப்பு ஆடுகளை கண்காணிக்கணும்னு விஷயம் தெரிஞ்ச காக்கிங்க பேசிக்கிறாங்க..

இன்னும் சொல்லப்போனா, கருப்பு ஆடுகள் விவகாரம் ஜெயில் காக்கிகளுக்கு தெரியாமலா இருக்கும்னு பேசிக்கிறாங்க.. விசாரணைய வலுவாக்குனாத்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.. சிக்குனது கருப்பு ஆடா, ஆடுகளான்னு விசாரிக்கணும்னு எதிர்பார்ப்பு எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அள்ளிக் கொடுத்தால் சந்தோஷம் வரும்.. கிள்ளிக் கொடுத்ததால் எப்படி சந்தோஷம் வரும் என ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்பவே மனசு உடைந்து போயிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில் கட்சிக்குள்ளாற கசமுசா ஏற்பட்டிருக்காம்.. பொறுப்பாளருக்கு எதிராக அணி திரண்டிருக்கும் ஒரு கோஷ்டியினர், எப்படியும் மாநகரில் இருந்து அவரை விரட்டியே ஆக வேண்டும் என சபதம் எடுத்து அதற்கான அடிப்படை வேலையில் இறங்கியிருக்காங்களாம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ நான் நியமித்த பொறுப்பாளர் தேர்தல் அறிவிக்கும் வரை அங்கேதான் இருப்பார் என்பதில் உறுதியாக இருக்காராம்.. இதனால் நாள்தோறும் இரு தரப்பினரும் புதுப்புது ரகசிய திட்டங்களை தீட்டிக்கிட்டே இருக்காங்களாம்..

அதே நேரத்தில் சார்பு அணியில் போடப்பட்டிருக்கும் செயலாளர்கள் அனைவரும் குக்கர், மய்யம் போன்ற கட்சிகளிலிருந்து ஓடிவந்தவர்கள்தானாம்.. இதுபோன்ற பட்டியலை எடுத்துள்ள எதிர்கோஷ்டியினர் இலைக்கட்சி தலைவரின் நேரடி பார்வைக்கு கொண்டு போகப் போறாங்களாம்.. மேலும் கட்சிக்காக உழைத்தவர்கள், துட்டை செலவு செய்ய தயாராக இருப்பவர்களை உயர் பதவிக்கு கொண்டு வந்தால்தான் தேர்தலை சந்திக்க முடியுமுன்னும் சொல்லிக்கிட்டிருக்காங்களாம்.. அதே நேரத்தில் வட்டம், பகுதி என அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் தீபாவளி போனஸ் கொடுத்திருக்காங்க..

ஊருக்கெல்லாம் அள்ளிஅள்ளி கொடுக்கும் எங்கள் தலைவர், சொந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் என ஆசையோடு கட்சி ஆபீசுக்கு சந்தோசத்தோடு போயிருக்காங்க.. ஆனால் கடந்த ஆண்டை விட துட்டு பாதியாக குறைஞ்சிப்போச்சாம்.. ரூ.5 ஆயிரம் வழங்கிய நிலையில் தேர்தல் வருவதால் ரூ.10 ஆயிரமாக உயரும் என நினைத்திருந்த நேரத்தில் அது ரூ.2 ஆயிரமாக குறைஞ்சிப்போச்சுதாம்.. இதனால் நிர்வாகிகள் ரொம்பவே மனசு உடைஞ்சு போயிட்டாங்களாம்..

தேர்தல் வரும் நேரத்தில் அள்ளிக்கொடுக்காமல் கிள்ளி கொடுத்தால் எப்படி சந்தோசம் வரும் என ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தத்தில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தீபாவளி தொகுப்பு பட விவகாரத்தால புல்லட்சாமி-ஆளுநரிடையே மோதல் தொடர்கதையாகி வருகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தகுதியுடைய அனைத்து வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 585 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ் கடவுள் பெயர் கொண்ட அமைச்சர் அறிவித்தாராம்..

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த எம்எல்ஏக்கள் மூலம் தீபாவளி தொகுப்பு தொடங்கி வைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறதாம்.. இந்த தீபாவளி தொகுப்பில் பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி படம் பொறிக்கப்பட்டு பையுடன் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கு.. ஆனால் இதில் துணை நிலை ஆளுநர் படம் இடம் பெறவில்லையாம்.. இந்த பிரச்னை ஆளுநரின் ராஜ் நிவாஸ் வட்டாரத்தில் பரபரப்பானதாம்.. தீபாவளி தொகுப்பில் ஆளுநர் பெயர் இடம்பெறாதது ஏன் என குடிமை பொருட்கள் வழங்கல் துறை செயலரிடம் ஆளுநர் மாளிகை கேள்வி எழுப்பி உள்ளதாம்..

இதற்கு பிரதமர் மோடி படம் போடப்பட்டுள்ளதாக ஆளும் அரசு தெரிவித்ததாம்.. இந்த பிரச்னை அரசியலில் புயலை கிளம்பி உள்ளது.. ஏற்கனவே மலராத கட்சி கூட்டணி அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத ஆளுநர், இப்பிரச்னையை டெல்லி வரை கொண்டு சென்றாராம்.. இதனால் பதில் அளிக்க வேண்டிய அதிகாரிகள் தற்போது கலக்கத்தில் உள்ளனராம்.. இப்படியாக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் தொடர் கதையாக வருவது கூட்டணி அரசு நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் எந்தவொரு நடவடிக்கையும் வெளியே தெரியாமல் கமுக்கமாக அமுக்கிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவி ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம்தான் தற்போது ‘டாக் ஆப் தி பல்கலை’யாக உள்ளதாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலை விடுதியில் தங்கியிருந்த ஆய்வு மாணவி ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்காரு..

அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மாணவிகள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைச்சிருக்காங்க.. இச்சம்பவத்தில் பல்கலை நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், சம்பவத்தை மறைத்து, நிர்வாக ரீதியிலான விசாரணையும் இன்றி விஷயத்தை வெளியே தெரியாமல் கமுக்கமாக அமுக்கி விட்டதாம்..

என்ன காரணம் என விசாரித்ததில் விடுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி, பல்கலை நிர்வாகத்தில் ஒரு சிலரின் நடவடிக்கையால் மனமுடைந்து, இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து விஷயம் வெளியே வந்தால் சிலர் சிக்குவார்கள் என்பதால் அமுக்கி விட்டனராம்.. இதுதான் பல்கலைக்கழகத்தில் தற்போது ‘டாக்’ ஆக உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.