Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டில் தனிமையில் இருந்த தம்பதியை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல்: இன்ஸ்பெக்டர் என கூறிய சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த காதல் தம்பதிகள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இருவரும் கடந்த 22ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது திறந்து இருந்த ஜன்னல் வழியாக சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இதனை தங்களின் நண்பர்கள் குழுவிற்கும் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் சம்மந்தப்பட்ட பெண் பணியாற்றும் இடத்திற்கு சென்ற ஒரு நபர், தான் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும், உங்கள் மீது தொடர்ந்து புகார் வருவதால் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய நபர், தனது செல்போனில் உள்ள வீடியோவை காண்பித்துள்ளார். இதில் இருப்பது நீங்கள் தானே என கேட்டுள்ளார்.

வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், ‘‘இதனை எப்படி எடுத்தீர்கள்’’ என கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘‘இந்த வீடியோவை வெளியே யாருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும்’’ என மிரட்டியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறியவுடன், அணிந்திருந்த தங்கச்செயின், தோடு ஆகியவற்றை தருமாறு கூறியுள்ளார். அது கவரிங் என கூறியவுடன் நாளை ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கணவரிடம் எதுவும் சொல்லாமல் எங்களுடன் தனிமையில் இருக்க வரவேண்டும். இல்லையென்றால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎஸ்பி மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், தனிமையில் இருந்த தம்பதியை வீடியோ எடுத்ததாக காரைக்குடி வைத்தியலிங்கம் பகுதியை சேர்ந்த கோகுல் சந்தோஷ் (21) பெரியார் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், அந்த வீடியோவை நண்பர்களின் சமூக வலைத்தள குழுவுக்கு அனுப்பிய முத்துபாண்டி (24) மற்றும் ஹரிஹரசுதன் (28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் ஹரிஹரசுதன் சித்தா டாக்டராக உள்ளார். இவர் பாதிக்கப்பட்ட பெண்ணை காரில் அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. நான்கு பேரின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவர்கள் யார், யாருக்கு வீடியோவை அனுப்பியுள்ளனர் என ஆய்வு செய்ய சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.