நிதிஷ் குமார் 20 ஆண்டாக தன் வசம் வைத்திருந்த உள்துறையை போல் சபாநாயகர் பதவியையும் ‘கபளீகரம்’ செய்த பாஜக; எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்டதால் பரபரப்பு
பட்னா: பீகார் மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் பிரேம் குமார் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், 89 இடங்களைக் கைப்பற்றி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது; ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களைப் பெற்றுள்ளது. இதனால் இம்முறை அதிகாரப் பகிர்வில் பாஜகவின் கை ஓங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சர் நிதிஷ் குமார் தன் வசம் வைத்திருந்த மிக முக்கியமான உள்துறை இலாகா, கூட்டணிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இம்முறை பாஜக வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகச் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியையும் பாஜக கைப்பற்றும் சூழல் ஏற்கனவே உறுதியாகியிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 18வது சட்டப்பேரவைக் கூட்டத்தில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இப்பதவிக்கு கயா நகர் தொகுதி எம்.எல்.ஏவும், பாஜகவின் மூத்த தலைவருமான பிரேம் குமார் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் குரல் வாக்கெடுப்பு மூலம் அறிவிக்கப்பட்டது. 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராவார். மரபுப்படி முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அவரை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதுகுறித்து அவையில் பேசிய உறுப்பினர்கள், ‘அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் அவையை நடுநிலையோடு வழிநடத்துவார்’ என்று வாழ்த்துத் தெரிவித்தனர். நிதிஷ் குமாரிடம் இருந்து உள்துறையை பறித்த பாஜக, தற்போது முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியையும் கபளீகரம் செய்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

