Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வீடு தேடி வரும் டெய்லர் கடை...

ரெடிமேடில் சாதாரண ஜாக்கெட்டுகள் வாங்கினால் கூட பரவாயில்லை எலாஸ்டிக் அல்லது பனியன் போல் அணியும் படியான ஸ்டைலில் பெண்கள் ஜாக்கெட்கள் பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் கேட்கும் அளவு கிடைப்பதில்லை, அல்லது அளவெடுத்து நம் விருப்பப்படி தைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கான காலமும் நேரமும் நம்மிடம் இல்லை. எதிர்பார்க்கும் டிசைன் இல்லை, குறிப்பாக உங்கள் அளவில் உடையே இல்லை போன்ற பிரச்னைகள் தான். இதற்கு தான் தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் ரம்யா மற்றும் அவரது குழு. டெய்லர் கடை. காம்... நகரத்தின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் நேரடியாக உங்கள் வீட்டிலேயே உடைக்கான அளவுகள் எடுத்துக்கொண்டு, துணிகளையும் வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள். மீண்டும் தைத்து முடித்து அவர்களே ஹோம் டெலிவரியும் செய்து விடுகிறார்கள். இது எப்படி சாத்தியம், என்னென்ன சவால்கள் உள்ளன, எங்கே தோன்றியது இந்த ஆலோசனை விவரமாக விளக்குகிறார் டெய்லர் கடை. காம் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ரம்யா.

டெய்லர் கடை எங்கே எப்படி துவங்கியது?

‘‘நான் ரெடிமேட் உடைகள் தான் பயன்படுத்துவேன். தனித்துவமா டிசைன் செய்து உடைகள் அணிய பிடிக்கும், ஆனால் நேரம் போதாது. ஒருநாள் அம்மா எனக்கு புடவை வாங்கிட்டு வந்திருந்தாங்க. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ள அந்த புடவையை கட்டியாகனும் என்கிற ஆசை இருந்துச்சு. அப்படி தேடினப்ப ஒருத்தர் கூட கிடைக்கலை. எல்லாருமே அதிக கால அவகாசம் கேட்டாங்க. அதேபோல நான் பெங்களூரில் வேலையில் இருந்தேன். அங்கே ஒரு பொட்டிக் அல்லது டெய்லர் கடையில் துணி தைக்க கொடுத்துவிட்டு திரும்ப வாங்குவதெல்லாம் கனவு மாதிரி இருக்கும். அங்கே இருக்கும் டிராபிக்கே நம்மை சோர்வாக்கி விடும். அப்படிப்பட்ட நகரங்களில் தினம்தோறும் ஆபீஸ் வீடு என சென்று வருவதே பெரிய விஷயம். இதில் எங்கிருந்து தையல் கடைக்கு வேறு அலைவது. அப்படிப்பட்ட தருணத்தில் தான் இந்த ஐடியா தோன்றியது.’’

ஹோம் டெலிவரி இதில் நிறைய சிக்கல்கள் சவால்கள் இருக்குமே?

‘‘நிறைய சவால்கள் இருக்கு. என்னதான் அளவெடுத்து தைத்தாலும், ஏதாவது ஒரு குறை, அல்லது அளவு பிரச்சனை வரும். திரும்பவும் எங்களுடைய டெலிவரி பணியாளர் மீண்டும் அதை வாங்கிட்டு வந்து என்ன பிரச்சனை என சொல்லி சரி செய்து வாங்கிட்டு போவார். ஆனால் பெரும்பாலும் சரியான அளவு எடுத்தால் பிரச்சனை பெரிதா வராது. இந்த மாதம் அளவெடுத்து அடுத்த மாதம் தைத்து கொடுத்தால் தான் உடல் எடை மாறும். உடனுக்குடன் டெலிவரி என்கையில் அளவில் மாற்றம் இருக்காது.’’

உங்களைப் பற்றி ...

கட்டிடக்கலை படிச்சேன். பேஷன் டிசைனிங் முடிச்சேன். தொடர்ந்து பிசினஸ் அனலாடிக்ஸ் படிப்பும் எடுத்து படிச்சேன். அதைச் சார்ந்து ப்ராடக்ட் அனலாடிக்ஸ் வேலையும் பெங்களூருவில் கிடைத்தது. இந்த டெய்லர் கடை பிசினஸ் துவங்கியது முதல் அந்த வேலையை விட்டுவிட்டு இப்போது முழுமையா சென்னைக்கு வந்துட்டேன் . உணவு டெலிவரி, டாக்ஸி புக்கிங், உள்ளிட்டோர் வீட்டுக்கு வெளியே நிற்பார்கள்... ஆனால் டெய்லர் கடை கான்செப்ட் அப்படி இருக்காதே?

‘‘சரியாக சொன்னீர்கள். நம் பெட்ரூம் வரையிலும் எங்களுடைய பணியாளர் செல்ல வேண்டிய சூழல் இருக்கும். நடு வீடு வரையிலும் யாரும் அனுமதிக்க மாட்டாங்க. அதற்காகவே தற்சமயம் பெண்களை தான் அதிகம் நியமிக்கிறோம். அதேபோல் தேவைப்பட்டால் குழந்தைகள் கணவர் உடன் கூட பணியாளர்கள் செல்லலாம் என்கிற சுதந்திரமும் கொடுத்திருக்கோம். எங்களுடைய பணியாளர்களுக்கு பிரத்யேக பயிற்சிகளும் கொடுக்கறோம். உதாரணத்திற்கு ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிலர் வீடு குழந்தைகள் இருக்கற காரணத்தால் எப்போதுமே குப்பையாக தான் இருக்கும். பார்த்தவுடன் முகம் சுளிப்பதும், கிடக்கும் குப்பையை பார்த்து கஷ்டமர்களை அளவிடுவதும் கூடாது. அதைப்போல் தேவையற்ற பேச்சுகள், வேலைக்கு சம்பந்தமில்லாத நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் எங்களுடைய டெய்லர் கடை பணியாளர்களுக்கு உண்டு. பெரும்பாலும் ஹவுஸ் வைஃப் பெண்களைத்தான் இதில் நியமிக்கிறோம். மிகவும் சென்சிடிவ் ஆன வேலை என்கிறதால் ஒவ்வொருவரின் பின்னணி விவரங்களும் சேகரித்து, விசாரித்து தான் பணியில் அமர்த்துகிறோம். கஷ்டமர்களின் பாதுகாப்பு குறித்து பேசும் அதே சமயம் பணியாளர்களின் பாதுகாப்பும் அவசியம் என்கிறதால் எங்களுடைய செயலிலேயே SOS எமர்ஜென்சி வசதிகள் உண்டு.

அளவு எடுக்க சென்ற இடத்தில் ஏதாவது வித்தியாசமாக தெரிந்தாலோ, அல்லது பணியாளர்களுக்கு இடையூறு தரும்படி கஸ்டமர்கள் நடந்து கொண்டாலும் உடனடியாக எமர்ஜென்சி அழைப்பில் கூப்பிடலாம். மேலும் செயலி இங்கே லைவ் லொகேஷன் உடன் எப்போதும் ஆன்லைனிலேயே இருக்கும். எந்த பணியாளர் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்கும் செயலிலேயே தெரியும். அதேபோல் உடனடி பாதுகாப்பிற்காக ஒவ்வொரு பணியாளர்களையும் பெப்பர் ஸ்பிரே உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்த அறிவுறுத்தி இருக்கிறோம். எப்படி உணவு டெலிவரி, டாக்ஸி புக்கிங் செயலிகள் செயல்படுகிறதோ அதே பாணியில்தான் எங்களுடைய டெய்லர் கடை இணையம் மற்றும் செயலி செயல்படுகிறது. பல டிசைனர்கள், பொட்டிக் , தையல் கடைகள் உட்பட ஒன்றிணைந்த இணையதள ஷாப்பிங் மார்க்கெட் தளம் ஆக இருப்பதுதான் டெய்லர் கடையின் நோக்கம். டெலிவரி மற்றும் அளவெடுக்க செல்லும் நபர் நிச்சயம் நாங்கள் கொடுக்கும் யூனிஃபார்மை அல்லது டீஷர்ட் அணிந்திருக்க வேண்டும். உடுத்திக் கொண்டு செல்லும் உடைகளும் நாகரிகமாக இருப்பது அவசியம். உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மற்றும் பயிற்சிகள் எங்களது பணியாளர்களுக்கு கொடுக்கிறோம். அதேபோல் அரசு அடையாள அட்டைகள் அவசியம். பெரும்பாலும் ஆதார்தான் கேட்போம். எனக்குப் பிடிச்ச உடையை நான் விரும்பி டிசைன் செய்து உடுத்தனும். இது எல்லோருக்குமே கனவா மாறிக்கிட்டு இருக்கு. முன்பு போல் குறைந்தபட்சம் பிளவுஸ் வகைகளாவது நம் விருப்பப்படி டிசைன் செய்து உடுத்துவோமே என்கிறது தான் டெய்லர் கடையின் நோக்கம்.

- ஷாலினி நியூட்டன்