Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீடுதான் உணவகம்!

குடும்பத்தோடு வரலாம்...பிடித்ததை ருசிக்கலாம்...

நல்ல உணவை எங்கு கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்பதற்கு உதாரணமாக விளங்கு கிறது அண்ணா நகர், டிவிஎஸ் காலனியில் இயங்கும் ‘டார்க் லிக்ஸ்’ என்ற உணவகம். இது மிகவும் வித்தியாசமான உணவகம். வீடுதான் உணவகம். சொந்த வீட்டுக்கு வருவதுபோல இந்த உணவகத்திற்குள் வருகிறார்கள், புத்தகம் படிக்கிறார்கள், டிவி பார்க்கிறார்கள், பிறகு சாப்பிட்டுச் செல்கிறார்கள். சாப்பிட்டு முடிக்கும் வரைதான் உணவகத்திற்குள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உணவகத்திற்குள் அதாவது வீட்டிற்குள் இருக்கலாம். அவ்வளவு சுதந்திரமான உணவகம் இது.

இந்த உணவகத்தை நிர்வகித்து வரும் திலீப்குமாரைச் சந்தித்தோம். ``வீடு என்றால் ஆள் நடமாட்டம் இருக்க வேண்டும் சார்’’ என்று மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ``எனக்கு உணவுத்துறையில் ஆர்வம் அதிகம். ஆனால், படித்ததோ வேறு. உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன். எனது மனைவி ஒரு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். அவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எங்களுடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை. அங்கேயே இருக்கும்படியான சூழல்.

இந்தச் சூழலில்தான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் வரத்தொடங்கியது. நாங்கள் தனியாக இருப்பதை உணராத மாதிரியும், அதே வகையில் மனசுக்கு பிடித்த வேலையையும் செய்ய வேண்டும் என்றும் யோசித்தோம். அப்போதுதான் எனது நண்பரின் மகன் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு ரெஸ்டாரென்ட் தொடங்கப்போவதாகச் சொல்லி எனது வீட்டைக் கேட்டார். நான் அதற்கு ஓகே சொன்னதும் ரெஸ்டாரென்ட் நடத்துவதற்கான எல்லா சான்றிதழ்களும் தயார் செய்து உணவகம் தொடங்கப்போகும் சமயத்தில் அவருக்கு கப்பலில் வேலை கிடைத்தது. உணவகம் நடத்தலாமா அல்லது கப்பலில் வேலைக்கு செல்லட்டுமா என்று என்னிடம் கேட்கும்போது உனக்கு கப்பல் வேலைதான் சரியாக இருக்கும், அதுதான் உனது வாழ்க்கைக்குத் தேவையானதும் கூட என்று சொல்லி நண்பரின் மகனை கப்பலுக்கு அனுப்பி வைத்தேன்.

அதன்பின், இந்த உணவகத்தை நாமே நடத்தலாம் என முடிவெடுத்து இப்போது வரை நடத்தி வருகிறேன். இப்படித்தான் நான் இந்த உணவுத்துறைக்கு வந்தேன். இந்த உணவகம் மிகவும் வித்தியாசமானது. இது உணவகம்தான், ஆனால் உணவகம் போல் இருக்காது. எனது வீட்டையே உணவகமாக மாற்றி இருக்கிறேன். உணவகத்திற்கு வருபவர்களும் எனது உணவகத்தை அவர்களின் வீடு மாதிரிதான் பார்க்கிறார்கள். குடும்பத்தோடும் நண்பர்களோடும் வந்து பலர் சாப்பிடுகிறார்கள். நான் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியில் இருக்கும்போது கலப் படம் செய்யப்பட்ட மருந்துகள், தீங்கு தரும் உணவுகள் எனப் பல வகையான உணவகங்களை சோதனை செய்து அந்த உணவுகளைத் தடை செய்திருக்கிறேன்.

இப்போது நானே ஒரு உணவகம் நடத்தி வருகிறேன். எவ்வளவு சுத்தமாக, அதே சமயம் எவ்வளவு குவாலிட்டியாக ஒரு உணவகத்தை நடத்த வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறேன். எங்களிடம் பணியில் இருக்கும் செஃப்களும் எங்களைப் போலவே உணவுகளைத் தரமாக கொடுக்க வேண்டும் என்பதில் சரியாக இருப்பார்கள். முறையாக கேட்டரிங் படித்த மாணவர்களைத்தான் உணவு தயாரிப்பதற்கு நியமித்து இருக்கிறேன். எல்லா வகையான உணவுகளையும் அவர்களே தயாரிக்கிறார்கள். ஆரம்பத்தில் பீட்சா, பர்கர் போன்ற கான்டினென்டல் உணவுகள்தான் கொடுத்துவந்தோம். உணவகத்திற்கு குடும்பத்தோடு சாப்பிட வருபவர்கள் குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் வாங்கிக் கொடுக்கிறோம், எங்களுக்கு ஏதாவது நம்ம ஊர் உணவுகள் கொடுங்க என்று கேட்டதும் சவுத் இந்தியன், பஞ்சாபி, சைனீஸ் போன்ற உணவுகளைக் கொடுத்து வருகிறோம்.

உணவகத்திற்குத் தேவையான பொருட்களை நானேதான் கடைக்குச் சென்று வாங்குகிறேன். வீட்டிற்கு எங்கு பொருட்கள் வாங்குவோமோ அங்குதான் கடைக்கும் வாங்குகிறோம். மதியம் 12 மணிக்கு துவங்குகிற உணவகம் இரவு 11 மணி வரை செயல்படுகிறது. வீட்டில் ஹாலில் அமர்ந்து சாப்பிடுகிறவர்கள் ஹாலில் இருக்கிற டிவியைப் பார்த்தபடி சாப்பிடுகிறார்கள். இதுபோக, தனியாக அறையில் அமர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு ப்ரொஜக்டரில் பெரிய ஸ்கிரீனில் பாடல்களைப் பார்த்தபடியே சாப்பிடும் வகையில் வசதி ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். இது ஐபிஎல் சீசன் என்பதால் ஐபிஎல் பார்ப்பதற்கும் தனியாக ஏற்பாடு செய்திருக்கிறோம்.நமது உணவகத்தில் பலவகையான உணவுகளைப் போலவே பேக்கரியில் கிடைக்கும் கேக்ஸ் அண்ட் டெசர்ட்ஸ் என அனைத்தும் கிடைக்கிறது. அதுவும் நமது கடையிலேயே தயாரிக்கப்படுகிறது.

பிரட் கூட நாங்கள் வெளியில் வாங்குவது கிடையாது. பஃப்ஸ், க்ரொசன்ட், கப் கேக், ஸ்வீட் கேக், மில்க் கேக் என இன்னும் பல வகையான கேக்குகள் இருக்கின்றன. டெசர்ட்ஸில் ப்ரவ்னி வித் ஐஸ்கிரீம், பிளாக் ஃபாரஸ்ட் கேக் எனப் பல வகைகள் இருக்கின்றன. ஸ்டார்ட்டர்சில் சிக்கன் பாப்கார்ன், சிக்கன் விங்ஸ், சிக்கன் சமோசா, ஃப்ரைடு சிக்கன் இருக்கிறது. குழந்தைகளுக்குப் பிடித்த ஃப்ரன்ஞ் ஃப்ரைஸ் இருக்கிறது. பீட்சாவில் வெஜ் அண்ட் நான்வெஜ் பீட்சாக்கள் இருக்கிறது. மெக்சிகன் பீட்சா, தந்தூரி அண்ட் பன்னீர் பீட்சா போன்ற 10 வகையான வெஜ் பீட்சாக்கள் இருக்கின்றன. அதேபோல, ஸ்பைசி சிக்கன் பீட்சா, பார்பிக்யூ பீட்சா, தந்தூரி பீட்சா என 11 வகையான நான்வெஜ் பீட்சாக்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் இந்த பீட்சாக்கள் வேறுவேறு சுவையில் தயாரிக்கப்படுகிறது. பர்கரில் கிரீம் வெஜ் பர்கர், சில்லி வெஜ் பர்கர், ஸ்பைசி பனீர் பர்கர் கொடுக்கிறோம்.

அதையே டபுள் லேயரிலும் கொடுக்கிறோம். நான்வெஜ் பர்கரும் இருக்கிறது. பாஸ்தா, சான்ட்வெஜ், மொஜிட்டோ, மில்க் ஷேக், ஐஸ்கிரீம்ஸ் என பல வகையான உணவுகள் இருக்கின்றன. இந்தியன் உணவுகள் என்று பார்த்தால் சூப்பில் இருந்தே ஆரம்பிக்கலாம். வெஜ் அண்ட் நான்வெஜ்ஜில் பலவகையான சூப்கள் இருக்கின்றன. மீன்களிலுமே வெரைட்டிகள் இருக்கின்றன. அதேபோல, ஃப்ரானிலும் வெரைட்டிகள் உள்ளன. தந்தூரி அண்ட் கிரில் தொடங்கி இந்தியன் வெஜ் அண்ட் நான்வெஜ் கிரேவி வரை அனைத்தும் இருக்கிறது. காடை, சிக்கன், மஸ்ரூம், மட்டன் என எல்லா வகையான கிரேவியும் இருக்கிறது. நாண் இருக்கிறது. ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் இருக்கிறது. இதுபோக தினமும் பாஸ்மதி சிக்கன் பிரியாணி கொடுத்து வருகிறோம்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் மட்டன் பிரியாணி கொடுக்கிறோம். இந்த பிரியாணியில் காம்போவாக தந்தூரி, கிரில் கொடுக்கிறோம். குழந்தைகளுக்குப் பிடித்த மோமோஸ் இருக்கிறது. இந்த உணவுகள் அனைத்துமே எனது கண்காணிப்பில்தான் சமைக்கப்படும். உணவுகளில் சுவை எந்தளவு முக்கியமோ அதேயளவு ஆரோக்கியம் முக்கியம். வீட்டில் சாப்பிடும்போது ஆரோக்கியத்திற்கு எப்படி பஞ்சம் இருக்காதோ அதேமாதிரிதான் நமது உணவகத்திலும். ஒருமுறை தனியாக வந்தவர்கள் அடுத்தமுறை குடும்பத்தோடும் நண்பர்களோடும் வருகிறார்கள். அந்தளவிற்கு இந்த உணவகம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. நானும் எனது மனைவியும்தான் இந்த உணவகத்தை நிர்வகித்து வருகிறோம். எங்களுக்குத் துணையாக எங்கள் உணவகத்தில் பணியில் இருக்கும் செஃப் அண்ட் வொர்க்கர்ஸ் இருக்கிறார்கள்’’ என மகிழ்வோடு பேசி முடித்தார்.

ச.விவேக்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்