Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் தாயாருக்கு இன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 21ம் தேதி தொடங்கி 2 நாட்கள் மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள ரங்கநாச்சியார் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று(28ம் தேதி) நடந்தது. இதையொட்டி இன்று காலை வட காவிரியான கொள்ளிடம் ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனித நீரை யானை ஆண்டாள் மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள் வெள்ளி குடங்களில் தோளில் சுமந்தும் கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

கோயிலின் ரங்க விலாச மண்டபத்தில் வைத்து புனித நீர் மேள தாளங்கள் முழங்க தாயார் சன்னதிக்கு எடுத்து செல்லப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. அங்கு மூலவர்கள் தேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியார் ஆகியோரது திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு, சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு தூய்மை செய்து மெருகூட்டப்பட்டது. பின்னர் பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் தேவி, பூதேவி திருமேனிகளில் பூசப்பட்டது. நாளை தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும்.