மிர்சாபூர்: உ.பி மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் கார்த்திகை பவுர்ணமியையொட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக பீகார் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுனார் பகுதிக்கு வந்திருந்தனர். ரயில் நிலையத்தின் நான்காவது பிளாட்பாரத்தில் சோபன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய சில பெண் பக்தர்கள் நடைமேடை பாலத்தை தவிர்த்து தண்டவாளத்தை கடந்து கங்கை கரைக்கு செல்ல முயன்றனர்.
அப்போது, பிரயாக்ராஜ் நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஹவுரா-கல்கா மெயில் (நேதாஜி எக்ஸ்பிரஸ்) ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பக்தர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில், 6 பெண் பக்தரகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு, மிர்சாபூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடைபாதை பாலம் இருந்தபோதிலும் எச்சரிக்கைகளை மீறி அவர்கள் தண்டவாளத்தைக் கடந்ததே விபத்துக்குக் காரணம் என கூறப்படுகின்றது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும், மீட்புக் குழுவினருடன் வாரணாசி கோட்டத்தின் மூத்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் இறந்தவர்கள் சவிதா(28), சாதனா(16), ஷிவ் குமார்912) அஞ்சு தேவி(20). சுசிலா தேவி(60) மற்றும் கலாவதி (50) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
* சட்டீஸ்கர் விபத்தில் பலி 11ஆக அதிகரிப்பு
சட்டீஸ்கரில் நேற்று முன்தினம் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த 20 பேர் உள்ளூர் மருத்துவமனையில் இருந்து அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். விபத்தினால் சேதமடைந்த தண்டவாளம் சரிசெய்யப்பட்டு நேற்று காலை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
