லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான மூத்த நடிகை ஜூன் லாக்ஹார்ட், தனது 100வது வயதில் காலமானார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் தம்பதியான ஜீன் மற்றும் கேத்லீன் லாக்ஹார்ட்டின் மகளான ஜூன் லாக்ஹார்ட், தனது 8வது வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். 1938ம் ஆண்டு வெளியான ‘எ கிறிஸ்துமஸ் கரோல்’ திரைப்படத்தில் தனது பெற்றோருடன் இணைந்து நடித்தார்.
தனது 22வது வயதில், ‘ஃபார் லவ் ஆர் மணி’ என்ற நாடகத்திற்காக, சிறந்த புதுமுக நடிகைக்கான முதல் ‘டோனி’ விருதை வென்று சாதனை படைத்தார். 1960ம் ஆண்டுகளில், ‘லாஸ்ஸி’ தொலைக்காட்சித் தொடரில் ரூத் மார்ட்டின் ஆகவும், ‘லாஸ்ட் இன் ஸ்பேஸ்’ தொடரில் மவுரீன் ராபின்சனாகவும் தாய் கதாபாத்திரங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். இவரது நடிப்பு, பல விண்வெளி வீரர்களுக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறப்படுவதால், 2013ம் ஆண்டு நாசா அமைப்பு இவருக்கு உயரிய சாதனைப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.
இந்த நிலையில், கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு காரணமாக தனது 100வது வயதில் அவர் காலமானார். அவர் உயிரிழந்தபோது, அவரது மகளும், பேத்தியும் உடனிருந்தனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
