சென்னை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதேபோன்று தென்தமிழகத்தில் கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குகிறது. மாநிலத்தின் பல்வேறு ஊர்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்திருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் இன்று (16.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இன்று (16.10.2025) கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.