*அருவிகளில் குடும்பத்துடன் உற்சாக குளியல்
தென்காசி : விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த 5 நாட்களாக சாரல் இல்லாத சூழலில் அருவிகளில் விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படுவதுண்டு. குற்றாலத்தில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரமாகும்.
இந்த சீசன் நேரங்களில் குளிப்பதற்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிவதுண்டு. இந்தாண்டு சீசன் கடந்த மே மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கியது. அன்று முதல் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி காணப்பட்டது.
குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். விடுமுறை நாட்கள் மட்டுமின்றி வார நாட்களிலும் விடுதிகள் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில் குற்றாலத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக சாரல் இல்லை. மதியம் வரை வெயில் காணப்படுகிறது. மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்து சற்று இதமான சூழல் நிலவுகிறது. மாலையில் இதமான காற்று வீசுகிறது. சில தினங்களாக சாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் சிறிதளவு தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது.
மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியிலும், பழைய குற்றால அருவியிலும் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுமாராக தண்ணீர் விழுகிறது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் பாபநாசத்துக்கும் வருகை தந்தனர். இதனால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மக்களும் ஏராளமானோர் வருகை தந்தனர். அவர்கள் பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் தாங்கள் கொண்டு வந்த ஆதார் அட்டையை காண்பித்து அனுமதி பெற்று சென்றனர். இதனால் அகஸ்தியர் அருவி பகுதியில் குளிக்க வந்தவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வனச்சரகர் குணசீலனின் அறிவுறுத்தலின் படி வனத்துறையினர் தீவிரமாக சோதனையிட்ட பிறகே அனுமதித்தனர். பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், மது பாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மது பாட்டில்கள் கொண்டு வந்தவர்களின் கண் முன்னாலே அழிக்கப்பட்டது. அகஸ்தியர் அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்காத வண்ணம் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.