தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், 10 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளாக கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின.
இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவோ, பரிசல் சவாரி செய்யவோ தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 13,249 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு நேற்று 18 ஆயிரம் கன அடிக்கும் கீழ் குறைந்தது.
ஒகேனக்கல் நீர் வரத்து குறைய தொடங்கியதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு மேலும் குறைந்ததால் 10 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.