40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சரித்திரம் தாயின் வழியில் அழகி பட்டத்தை வென்ற மகள்: ‘மிஸ் இங்கிலாந்து’ போட்டியில் புதிய திருப்பம்
லண்டன்: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ‘மிஸ் பிளாக்பூல்’ அழகிப் பட்டத்தை வென்ற தனது தாயின் வழியில், தற்போது அவரது மகளும் அதே பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு ‘மிஸ் பிளாக்பூல்’ அழகி போட்டி நடந்த போது, விக்கி என்பவர் ‘மிஸ் பிளாக்பூல்’ பட்டத்தை வென்றார். இந்த நிலையில், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், அவரது 20 வயது மகள் தபிதா பென்னட் ‘மிஸ் பிளாக்பூல்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
இந்த நிகழ்வு இங்கிலாந்து ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது ‘மிஸ் லங்காஷயர்’ பட்டத்தையும் வென்றுள்ள தபிதா, வரும் நவம்பர் 21ம் தேதி நடைபெற உள்ள ‘மிஸ் இங்கிலாந்து’ இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இவரது தாய் விக்கியும் தனது காலத்தில் ‘மிஸ் இங்கிலாந்து’ இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இதன் மூலம், ‘மிஸ் இங்கிலாந்து’ இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் தாய் - மகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், தபிதா வெறும் 50 பவுண்டு மதிப்புள்ள பழைய ஆடையை அணிந்து ‘மிஸ் லங்காஷயர்’ பட்டத்தை வென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தபிதாவின் தாய் விக்கி கூறும்போது, ‘அழகிப் போட்டிகளுக்கான மதிப்பீட்டு முறைகள் தற்போது மாறிவிட்டன. அந்தக் காலத்தில் அழகாக இருப்பவர்களுக்கு மட்டுமே பட்டம் கிடைத்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நிறைய வழிமுறைகள் பின்றப்படுகின்றன’ என்றார்.