Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரலாற்று அதிசயங்களை வெளிப்படுத்தும் பொருநை நாகரிகம் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலை

*நெல்லை பல்கலை. தொல்லியல் மாணவர்கள் கண்டுபிடிப்பு

நெல்லை : தென்காசி, கல்லத்திக்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொருநை எனப்படும் தாமிரபரணி நதிக்கரை நாகரிகம், உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என அதன் பெருமைகளைப்பேசும் இடங்களின் வரிசையில், தற்போது தென்காசி மாவட்டத்தின் கல்லத்திக்குளம் கிராமமும் இணைந்துள்ளது. இங்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறையினர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை செயல்பட்டதற்கான உறுதியான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்லத்திக்குளம் கிராமம். தங்கள் கிராமப்பகுதியில் உள்ள ‘பரம்பு’ என்று அழைக்கப்படும் மேட்டு நிலத்தில், பழங்காலப் பொருட்கள் சிதறிக் கிடப்பதை அக்கிராம மக்கள் கவனித்துள்ளனர்.

வரலாற்று ஆர்வமும், தங்கள் மண்ணின் பெருமையை அறியும் ஆவலும் கொண்ட அந்த கிராம மக்கள், உடனடியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத்தலைவரை தொடர்புகொண்டு, இப்பகுதியில் ஆய்வு செய்ய அழைப்பு விடுத்தனர்.

நெல்லை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) சுதாகர், உதவிப் பேராசிரியர்கள் மதிவாணன் மற்றும் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர், துறையின் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுடன் கல்லத்திக்குளம் சென்றனர். பேராசிரியர் குழுவினர், மாணவர்களுடன் இணைந்து கல்லத்திக்குளம் பரம்புப் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வைத் தொடங்கினர்.

அங்குலம் அங்குலமாக அந்தப் பகுதியை ஆய்வு செய்தபோது, அப்பகுதி முழுவதும் ஏராளமான இரும்பு உருக்கிய பின்னர் வெளியேற்றப்படும் கழிவுகளான ‘இரும்பு கசடுகள்’ பரவலாக கிடந்தன. மேலும், உருகிய இரும்பை கருவிகளாகவும், பிற பொருட்களாகவும் வார்த்து எடுக்கப் பயன்படுத்தப்படும் சுட்ட மண்ணாலான குழாய்களின் உடைந்த பகுதிகளையும் அவர்கள் கண்டெடுத்தனர்.

இந்த தொல்பொருட்களைக் கண்டதும், பேராசிரியர் குழுவினருக்கு இது ஒரு சாதாரண இடம் அல்ல, பழங்காலத்தில் ஒரு தொழிற்கூடம் இயங்கிய இடம் என்பது புலப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கசடுகளின் அடர்த்தியையும், மண் குழாய்களின் தன்மையையும் கொண்டு, இப்பகுதியில் ஒரு இரும்பு உருக்காலை இயங்கி வந்துள்ளதை அவர்கள் உறுதி செய்தனர்.

பிற தொல்லியல் தடயங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த பேராசிரியர்கள், இந்த இரும்பு உருக்காலையின் காலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர். இது, சங்க காலத்தின் இறுதிக்கட்டத்தையோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்தையோ சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்லத்திக்குளம் கண்டுபிடிப்பு, தாமிரபரணி மற்றும் கிளை நதிக்கரையின் இரும்புக்கால வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்த்துள்ளது.

சிவகளையை தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், வல்லநாடு, பாளை., ராஜகோபாலபுரம், கோடகநல்லூர் போன்ற பல இடங்களில் பழங்காலத்தில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. அதுபோல் தாமிரபரணி கிளை நதிக்கரைகளில் உள்ள நெல்லை, இடைகால் பகுதியிலும் இரும்புக் கசடுகள் கிடைத்துள்ளன. தற்போது இந்த வரிசையில் தாமிரபரணி கிளை நதியான சிற்றாறு கரையில் உள்ள தென்காசி கல்லத்திக்குளமும் இணைந்திருப்பது, ஒரு பரந்துபட்ட, மேம்பட்ட இரும்பு உருக்கு ஆலை புழக்கத்தில் இருந்ததை உறுதி செய்கிறது.

தற்போது கிடைத்துள்ள தொல்பொருட்களை கார்பன் டேட்டிங் போன்ற நவீன அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம், இந்த உருக்காலையின் காலத்தை இன்னும் துல்லியமாகக் கண்டறிய முடியும். இம்முயற்சிகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. இத்தகைய ஆய்வுகள், பொருநை நாகரிகத்தின் காலத்தையும், அதன் தொழில்நுட்ப வளர்ச்சியின் படிநிலைகளையும் இன்னும் தெளிவாக வரையறுக்க உதவும்.

இந்த தொல்லியல் கண்டுபிடிப்பிற்கு வித்திட்ட கல்லத்திக்குளம் கிராம மக்களையும், கள ஆய்வில் ஈடுபட்டு வரலாற்று உண்மையை வெளிக்கொணர்ந்த தொல்லியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் பாராட்டினார்.

தொடர வேண்டும்

இதுகுறித்து தொல்லியல் துறை தலைவர் (பொ) சுதாகர் கூறுகையில், ‘நெல்லை பல்கலைக்கழகத்தின் நோக்கம், வகுப்பறைக் கல்வியுடன் நின்றுவிடாமல், நமது மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதும் ஆகும். இந்த ஆய்வில் மாணவர்களை ஈடுபடுத்தியது, அவர்களுக்கு சிறந்த கள அனுபவத்தை அளித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தகவலை அளித்து, இந்த ஆய்வுக்கு அடித்தளமிட்ட கிராம மக்கள் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள். இதுபோன்ற சமூகப் பங்களிப்பு தொடர வேண்டும்’ என்றார்.