Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார் துணை முதலமைச்சர்

சென்னை: இந்த திருண விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை; முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக 32 இணையர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் சீர் வரிசையோடு, இன்றைக்கு உங்களது முன்னிலையில் இந்த திருமணங்களை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் சார்பாக மணமக்களுக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். இன்றைக்கு சென்னையில் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் இல்வாழ்க்கையில் இணைய இருக்கின்ற 193 இணையர்களுக்கு இன்றைக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமணங்களுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, இதே திருமண மண்டபத்துக்கு வருகை தந்து, அறநிலையத்துறையின் சார்பில் 40 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்கின்ற வாய்ப்பை வழங்கினார். இப்போது மீண்டும் அந்த வாய்ப்பை வழங்கியிருக்கின்றார். கடந்த மே மாதம், நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையிலே ஒரு முக்கியமான அறிவிப்வை வெளியிட்டார்.

இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறையின் சார்பாக 1000 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் என்பது தான் இலக்கு. அதன்படி, நம்முடைய முதலமைச்சர் , கடந்த ஜுலை மாதம் சுமார் 775 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். இன்றைக்கு. இங்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைக்கப்படுகின்ற திருமணங்களின் மூலம், அறநிலையத்துறையின் சார்பில் 1000 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து இலக்கினை அடைந்து விட்டார். எனக்கு பக்கத்தில் அமர்திருக்கும் இணையர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். மணமகனின் பெயர் சந்தோஷ், மணமகளின் பெயர் லட்சுமி. சந்தோஷிடம் எப்படிப்பா பெண்ணை தெரியும் என்று கேட்டேன். நான் நினைத்திருந்தது போலவே, அவர் தனக்கு காதல் திருமணம் என்று தெரிவித்தார். எப்படிப்பா பழக்கம் என்று கேட்டேன். ஒரு வருடமாக ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம் என்று தெரிவித்தார். மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் காதல் திருமணத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தும் எனக்கும் தெரியும்.

எனக்கும் காதல் திருமணம்தான். முதலில் பெண் ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய கஷ்ட படவேண்டும்.பிறகு பெண்ணின் அப்பா, அம்மா ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சமாதானப் படுத்தவேண்டும். அதற்கு அடுத்து பெண்ணின் மாமா, சித்தப்பா என்று எல்லோரும் கிளம்பி வருவார்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து விடுவார்கள். அனைவரது சம்மதத்தையும் வாங்கிய பிறகு, பெண் முடியாது என்று மறுத்துவிடுவார். பிரச்சினைகள் இருக்கின்றன. பிரச்சினைகளையெல்லாம் சமாளித்து, இன்றைக்கு இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இப்படி ஏகப்பட்ட அந்த இன்று நடைபெறுகின்ற திருமணங்களில் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்தான், எனவே இது அறநிலையத்துறையா. அன்பு நிலையத்துறையா என்கின்ற வகையில் அவ்வளவு காதல் திருமணங்களை அண்ணன் சேகர்பாபு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இணையர்களை பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருமே நன்கு படித்துள்ளார்கள். அது கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றது.

50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. மணமக்கள் உங்களுடைய அப்பா அம்மா அல்லது தாத்தா பாட்டியின் திருமண பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால், அதில் படித்து வாங்கிய பட்டம் இருக்காது. மாறாக சமுதாய பெயர். அவர்களுடைய சாதிபேர் தான் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு சாதி பெயர்கள் இருப்பதில்லை. மணமக்கள் படித்து வாங்கிய பட்டங்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. இந்த பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் இருக்கின்றது. இதற்கு காரணம். நமது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான், இத்தனை சீர்திருத்தங்களும் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வந்து இருக்கின்றது. குறிப்பாக இன்றைக்கு மகளிர் நிறையேபேர் வந்திருக்கின்றீர்கள். மகளிர் மேம்பாட்டுக்காக நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். முக்கியமாக மகளிர் விடியல் பயணத் திட்டம். ஆட்சிக்கு வந்ததுமே, மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு தான் நம்முடைய முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

இந்த விடியல் பயணத் திட்டம் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் கிட்டத்தட்ட 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு திட்டத்தை எப்படி அழகாக பயன்படுத்த வேண்டும் என்று மகளிரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய் சேமிக்கின்றார்கள். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. அதே மாதிரி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றார்கள். சமீபத்தில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சிக்காக பஞ்சாப் மாநில முதலமைச்சர் சென்னைக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளிடம் பேசிவிட்டு, இந்த திட்டத்தை பாராட்டினார். முதலமைச்சர் அவர்களே என்னுடைய வாழ்த்துகள். இது ஒரு சிறப்பான திட்டம். விரைவிலேயே என்னுடைய மாநிலத்திலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றேன் என்று தெரிவித்தார். அவர் கூட்டணி கட்சி முதலமைச்சர் கிடையாது. இதுதான் திராவிட மாடல் அரசு. நம்முடைய முதலமைச்சர் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றார். அதேபோல் பள்ளிபடிப்பு படித்தால் மட்டும் போதாது. பள்ளிப்படிப்பு முடித்து உயர்கல்வி படிக்கவேண்டும் என்பதற்காக, அரசுப்பள்ளியில் படித்து, உயர்கல்வி சேரும், மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை மாணவிகளின் சம்மந்தப்பட்ட மாணவர், வழங்கப்படுகின்றது. வங்கிக்கணக்கிலேயே அடுத்து ஒரு முக்கியமான திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம். இந்த திட்டம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு மாதமும், ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் மாதம் 1000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் கொடுத்திருக்கின்றார்.இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு நாளை 15 ந்தேதியோட 2 வருடம் நிறைவடைந்து மூன்றாவது வருடம் தொடங்கு கின்றது.

இப்போது தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்வேறு முகாம்கள் நடத்தி இருக்கின்றோம். இந்த முகாம்களில் கிட்டத்திட்ட 40 சதவீத விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி மனுக்கள் அளித்து இருக்கின்றீர்கள். சென்ற முறை எனக்கு மிஸ் பண்ணீட்டீங்க. எதிர் வீட்டு அக்காவிற்கு கிடைக்குது எனக்கு கிடைக்கவில்லை. இப்படி சில புகார்கள் வந்திருக்கின்றன. முதலமைச்சர் திட்டத்தின் சில விதிகளை தளர்த்தியுள்ளார். நிச்சயம் செல்கின்றேன். இன்னும் ஓரிரண்டு மாதங்களில் தகுதியுள்ள விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் நிச்சயமாக கிடைக்கும். இது மாதிரியான திட்டங்களால தான் இன்னைக்கு 11.19 சதவீதம் வளர்ச்சியோட இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்துல இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், அண்ணன் சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டுட்டு கொண்டிருக்கின்றது. இந்த நான்கரை வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆயிரத்துக்கும் அதிகமான திருக்கோயில்களுக்குச் சொந்தமான 8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் 29 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. நம்முடைய அரசு அமைந்த பிறகு, சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு. ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அறநிலையத்துறையின் மூலமாக முதலமைச்சர் திறந்திருக்கின்றார். ஏழை எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நாம் இந்தக் கல்லூரிகளைத் திறந்தால், கோயில் நிதியில் எதற்காக கல்லூரி திறக்குறீங்கன்னு என்று ஒருவர் தொடர்ந்து கேட்டு வருகின்றார். நான் யாரை செல்கின்றேன் என்று உங்களுக்கு தெரியும். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறநிலையத்துறையின் நிதியை குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தக் கூடாது. இது எப்படி நியாயம் என்று கேட்கின்றார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்குப் போட்டார்கள். ஆனா, கோர்ட், அறநிலையத்துறையின் பணம் மக்களுக்குத்தான் சொந்தம். அதனை கல்விக்கு உபயோகப்படுத்தலாம் என்று அனுமதித்துள்ளார்கள். எனக்கு இப்ப என்ன சந்தேகம் என்றால், இன்றைக்கு அறநிலையத்துறையின் இவ்வளவு திருமணங்கள் சார்பில் நடைபெறுகின்றன. இதற்கும் அவர் கோபித்துக் கொள்ளக் கூடும். அறநிலையத்துறை நிதியில மணமக்களுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தீர்கள் என்று கோபித்துக் கொண்டாலும், கொள்வார். கேள்வி எழுப்பினாலும் எழுப்புவார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இன்று எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. திராவிட மாடல் அரசின் சாதனைகள் அவருடைய கண்களை உறுத்திக் கொண்டு இருக்கின்றன. ஆகவே, திராவிட மாடல் அரசு என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். நீங்கள் அனைவரும் திராவிட மாடல் அரசிற்கும். நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும் என்றும் பக்கபலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒரு சிறிய அறிவுரை. Advice பண்ணா உங்களுக்குப் பிடிக்காது. அது எனக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக. கூடப்பிறக்காத ஒரு அண்ணனாக இந்த அறிவுரையை சொல்கின்றேன்.

நீங்க ஒருவரையொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் சுயமரியாதையோடு நடத்த வேண்டும். எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமோ, அதற்கு விட்டுக் கொடுத்து. எதற்கு விட்டுக் கொடுக்க கூடாதோ அதில் திடமாக நின்று சுயமரியாதை உணர்வுடன் உங்கள் திருமண வாழ்க்கையை வாழுங்கள். உரிமைகளை கேட்டுப்பெறுங்கள். முக்கியமாக, நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து வைக்கின்ற கோரிக்கை. உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு, ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தைகயாக இருந்தாலும், அழகான தமிழ்ப்பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு, மணமக்கள் அனைவரும், முதலமைச்சர் அவர்களும், திராவிட மாடலும் போல பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்! என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார். இந்த திருமண விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி. சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மணமக்களின் உறவினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.