Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.43 கோடியிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்: ரூ.48 கோடியில் முடிவுற்ற 27 பணிகளை திறந்து வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டில் 4 திருக்கோயில்களில் 4 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.48.81 கோடியில் 7 திருக்கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வர் அலுவலகங்களை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ரூ.10.47 கோடியில் கட்டப்பட்டுள்ள கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.3.52 கோடியில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இரண்டு கலைக் கல்லூரிகளில் மொழி ஆய்வுக் கூடங்கள் மற்றும் அருள்மிகு இடும்பன் திருக்கோயில் முடிக் காணிக்கை மண்டபம் என மொத்தம் ரூ.48.81 கோடி செலவிலான 27 முடிவுற்ற பணிகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கூடுதல் ஆணையர் பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* சுற்றுலாத்துறையில் ரூ.7.46 கோடியில் திட்டப்பணிகள் நிறைவு

சுற்றுலாத்துறையில் ரூ.7.46 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, ரூ 16.30 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம்- ஜவ்வாது மலை, கரூர் மாவட்டம் - பொன்னணியாறு அணை மற்றும் நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை ஆகிய இடங்களில் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் 7.46 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.16.30 கோடியில் 5 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.