ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய அதானி மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு: எந்த ஆதாரமும் இல்லை என வழக்கை முடித்தது செபி
மும்பை: அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகள் செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது. நீண்ட விசாரணைக்கு பின், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தள்ளுபடி செய்து வழக்கை முடித்துள்ளது. அமெரிக்காவின் ஷார்ட் ஷெல்லிங் நிறுவனமான ஹிண்டர்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டது.
106 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் கார்ப்பரேட் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரிய மோசடியை செய்திருப்பதாக கடுமையாக குற்றம்சாட்டியது. குறிப்பாக, மொரீஷியஸ், கரீபியன் தீவுகள் என வரி ஏய்ப்புக்கு உகந்த நாடுகளில் அதானி குழுமத்தின் முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து 88 கேள்விகளை எழுப்பியது. இதன் காரணமாக, அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு தவறான தகவல்களை தந்து ஏமாற்றியிருப்பதாக கூறியது.
இந்த ஆய்வறிக்கையை தொடர்ந்து, அதானி நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தன. ஒன்றிய பாஜ அரசு, அதானி குழுமத்தின் மோசடிகளுக்கு உதவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டது. மேலும், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி 2 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், 2 மாதத்தில் முடிக்க வேண்டிய விசாரணையை 2 ஆண்டாக நடத்திய செபி நேற்று விசாரணை முடிவை வெளியிட்டுள்ளது. அதில், உள்வர்த்தகம், சந்தை மோசடி, பொது பங்குதாரர் விதிமுறைகளை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தியதில் அவை ஆதாரமற்றவை என கூறி உள்ளது.
மேலும், அடிகார்ப் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், பல்வேறு அதானி குழும நிறுவனங்களிடமிருந்து பொதுப் பட்டியலில் உள்ள அதானி பவார் நிறுவனத்திற்கு நிதியைத் திசை திருப்ப பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என கூறி உள்ளது.
அடிகார்ப், மைல்ஸ்டோன் டிரேட்லிங்க்ஸ் மற்றும் ரெஹ்வார் இன்ப்ராஸ்ட்ரக்சர் இடையேயான கூட்டு நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் செபி சட்டம், பட்டியலிடும் ஒப்பந்தம் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும், அவை தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனைகள் என்ற வரையறைக்குள் வரவில்லை என்றும் செபி முடிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தக்கூடிய எந்த மீறல்களும் கண்டறியப்படவில்லை என்றும், இதன் விளைவாக அதானி நிறுவனங்கள் அல்லது நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ எந்த அடிப்படையும் இல்லை என்று செபி முடிவு செய்து வழக்கை முடித்து வைத்துள்ளது. இதன் மூலம் அதானி குழும நிறுவனங்கள் மீது எந்த தவறும் இல்லை என செபி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அதானி வரவேற்பு
செபி விசாரணை அறிக்கையால் உற்சாகமடைந்த தொழிலதிபர் கவுதம் அதானி தேசிய மூவர்ண கொடியுடன் கூடிய தனது எக்ஸ் பதிவில், ‘‘ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நாங்கள் தொடர்ந்து கூறி வந்ததை செபி உறுதிப்படுத்தி உள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை எப்போதும் அதானி குழுமத்தை வரையறுத்துள்ளன.
இந்த மோசடி அறிக்கையால் பணத்தை இழந்த முதலீட்டாளர்களின் வலியை நாங்கள் ஆழமாக உணர்கிறோம். தவறான கட்டுக்கதைகளைப் பரப்பியவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய நிறுவனங்கள், இந்திய மக்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. சத்யமேவ ஜெயதே! ஜெய் ஹிந்த்!’’ என கூறி உள்ளார்.