சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு, மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தரம்பூர் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது. டேராடூனில் சகஸ்தரதாராவில் உள்ள தப்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலின் மண்டி மாவட்டத்தின் நிஹ்ரி பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவால் பாறையின் இடிபாடுகள் ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மண்டி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தரம்பூர் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது. நேற்று இரவு முதல் மண்டியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தரம்பூர் பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பலத்த நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
சோன் காட் நதி திடீரெனப் பெருக்கெடுத்து சீற்றம் கொண்டதால் தர்மபூர் நகரம் மிகவும் பாதிக்கப்பட்டது. நள்ளிரவில், பேருந்து நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது, பல அரசு பேருந்துகள் மூழ்கடிக்கப்பட்டு, கார்கள், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.