சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் பயணித்த நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துடா பகுதியில் நேற்று (அக்டோபர் 7) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பயணிகள் தனியார் பேருந்து சிக்கியது. நிலச்சரிவின் இடிபாடுகள் மற்றும் பாறைகள் நேரடியாக வாகனத்தின் மீது விழுந்ததால், பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதன் விளைவாக, 18 பேர் உயிரிழந்தனர்.
18 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததால் இறப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய பயணிகளை மீட்கும் பனி நடைபெற்று வருகிறது.
பேருந்து கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.