இமாச்சல், பஞ்சாப்பை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.1,200 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
டேராடூன்: உத்தரகாண்டில் வேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு ரூ.1,200 கோடியை வெள்ள நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான உபி மாநிலம் வாரணாசியில் மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமை நேற்று சந்தித்த பின் விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வந்தடைந்தார். அவரை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றார். சமீபத்தில் பருவமழைக் காலத்தில் உத்தரகாண்டில் பல்வேறு பகுதிகள் பலத்த மழை, மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேரைக் காணவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த ஒன்றிய குழு மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்ததை தொடர்ந்து பிரமதர் மோடி உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு அதிகாரிகளை சந்தித்து வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்த அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். பேரிடரின் போது மீட்பு பணிகளை மேற்கொண்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை மீட்டெடுக்க ஒன்றிய அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்த பிரதமர் மோடி, உத்தரகாண்டுக்கு ரூ.1,200 கோடியை வெள்ள நிவாரண நிதியாக அறிவித்தார். மேலும், இயற்கை பேரிடர்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். கடந்த 9ம் தேதி பஞ்சாப், இமாச்சலில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி முறையே அம்மாநிலங்களுக்கு ரூ.1,600 கோடி மற்றும் ரூ.1,500 கோடியை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.