சிம்லா: இமாச்சல பிரதேசத்தில், கடந்த 2 மாதங்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கால்நடைகள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
நீர் விநியோக திட்டங்கள், சாலைகள், மின்சார உட்கட்டமைப்புகள், பள்ளிகள், சுகாதார நலன், விவசாயம் மற்றும் வீட்டு வசதி சார்ந்த விசயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன என திட்டமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் நேற்று (6-ம்தேதி) வரையிலான காலகட்டத்தில், பரவலாக ஏற்பட்ட பாதிப்புகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இதில், இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு 366 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 203 பேர் மழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தனர். 163 பேர் சாலை விபத்துகளில் சிக்கி பலியானார்கள். அதிக அளவாக நிலச்சரிவுகளில் சிக்கி 42 பேரும், நீரில் மூழ்கி 34 பேரும், மேகவெடிப்பில் 17 பேரும், மரம் விழுந்து அல்லது பாறைகள் உருண்டு 40 பேரும் பிற காரணங்களால் 28 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
இதேபோன்று, அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் ரூ.4,073 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 3,390 வீடுகள், 40 குடிசைகளும் சேதமடைந்து உள்ளன. 1,464 கால்நடைகளும், 26,955 பண்ணை பறவைகளும் உயிரிழந்து உள்ளன.