நெடுஞ்சாலைகளில் நடத்துவதற்கு நீதிமன்ற தடை எதிரொலி எடப்பாடி பிரசாரம் திடீர் ரத்து: பொதுக்கூட்டங்களாக மாற்றி நடத்த திட்டம்
சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரசாரத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், குமாரபாளையம், திருச்செங்கோட்டில் இன்றும், நாளையும் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அது வரும் 8, 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சாலை பிரசாரங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்து உள்ளதால் பொதுக்கூட்டங்களாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் சந்திப்பை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பிரசாரம் செய்ய ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அப்போது, அரசு வக்கீல், நெடுஞ்சாலைகளில் மக்கள் சந்திப்பை நடத்த தடை விதிப்பது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை நெடுஞ்சாலைகளில் பிரசாரம் நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு வக்கீல் தெரிவித்ததை பதிவு செய்து கொண்டதோடு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரசாரம் நடத்த நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
அதேநேரத்தில், நடிகர் விஜய் போன்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரசார வாகனத்தில் இருந்தபடியே பொதுமக்களை சந்தித்து வருகிறார். அவர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணித்து மக்களை சந்தித்து வருகிறார். அவர் தொடர்ந்து 150 தொகுதிகளுக்கு மேல் பிரசாரம் செய்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தர்மபுரியில் பிரசாரம் செய்திருந்தார்.
நேற்று ஓய்வுக்கு பிறகு இன்று (5ம் தேதி) திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியிலும், நாளை (6ம் தேதி) நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அவரை வரவேற்று, அதிமுகவினர் நாமக்கல் நகரில் பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் கட்டினர். நாமக்கல் நகரில் பதிநகர், பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் பிரசார கூட்டம் நடத்த அதிமுகவினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலையோரம் பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டதால், நாமக்கல்லில் அதிமுகவினர் தேர்வு செய்த இடங்களில், அனுமதி அளிக்க காவல்துறை மறுத்து விட்டது. இதேபோல, திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் பகுதியிலும் அதிமுகவினர் பிரசார கூட்டம் தேர்வு செய்த இடங்களின் அருகில், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் வருவதால் அந்த பகுதிகளுக்கும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதைதொடர்ந்து, நேற்று காலை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ, சேகர் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர், நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலாவை சந்தித்து பேசினர். அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சாலையோரங்களில் கூட்டம் நடத்த அனுமதியில்லை. வேறு இடங்களை தேர்வு செய்து அனுமதி பெற்று கொள்ளும்படி அவர்களிடம் எஸ்பி தெரிவித்தார்.
புதிய இடங்களை தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெற கால அவகாசம் குறைவாக இருப்பதால், இன்று (5ம் தேதி), நாளை (6ம் தேதி), நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த பிரசார கூட்டத்தை அதிமுகவினர் ரத்து செய்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறுகையில், ‘திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் ஏற்கனவே தேர்வு செய்த இடங்களில் கூட்டம் நடத்த முடியாது.
நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலைகளில் அனுமதி கிடையாது என்பதை காவல்துறை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்துள்ளது. இதனால் வேறு இடங்களை தேர்வு செய்து பிரசார கூட்டங்கள் நடத்துவோம். இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது’ என்றார். இதனிடையே, தலைமை கழகத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், `எடப்பாடி பழனிசாமியின் 5ம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், அக்டோபர் 5, 6ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நாமக்கல் மாவட்டத்தில் மேற் கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்தில் வரும் 8ம் தேதிக்கும், நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரில் வரும் 9ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 10ம் தேதி எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பிரசாரம் செய்ய நீதிமன்றம் தடை விதித்து உள்ளதால் எடப்பாடி பிரசாரத்தை பொதுக்கூட்டங்களாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்து முறைப்படி அனுமதி பெற்று நடத்த அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.
* கிருஷ்ணகிரியில் இன்று பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
தமிழகம் முழுவதும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், பொருளாளர் சதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளம் தேடி, இல்லம் தேடி என்கிற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று (5ம் தேதி) தேமுதிக சார்பில் பிரேமலதா கலந்து கொள்ளும், ரத யாத்திரை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, கிருஷ்ணகிரி நகர செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள், டவுன் போலீசில் மனு அளித்தனர்.
அதில், கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில், உள்ள தாலுகா அலுவலகம் முதல் 5 ரோடு ரவுண்டானா வரை நடைபயணமாக ரோடு ஷோ சென்று, அங்கு வேன் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், கரூர் சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரியில் ரோடு ஷோ மற்றும் வேன் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே, அண்ணா சிலை எதிரே மேடை அமைத்து பொதுக்கூட்டம், பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.