2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கட்டாயமில்லை: ஒன்றிய அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: குற்ற செயல்களை தடுக்க உதவும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை 2019ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களில் பொருத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதே நேரத்தில் இதுதொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய மோட்டார் வாகன பாதுகாப்பு சங்க நிர்வாகி ஆர்.சேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதில் கண்டறியும் வகையில் வாகனங்களின் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்த கோரி ஒன்றிய அரசுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் இந்தியாவில் 20 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்றும் அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி, வாகனங்களில் உயர் தர பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் இந்தியாவில் 20 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த நம்பர் பிளேட்டுகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் இந்தியாவில் 20 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 2019க்கு ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கும் இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்துவது கட்டாயமில்லை. மோட்டார் வாகன சட்ட விதிகளில் கட்டாயம் என்பது கூறப்படவில்லை. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் இந்த நம்பர் பிளேட்டை பொருத்திக்கொள்ளலாம். இந்த விஷயத்தில் மோட்டார் வாகன சட்டம் இயற்ற கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள ஒன்றிய அரசில் முறையிடலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.


