Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை ஆந்திராவில் இனி 10 மணிநேரம் வேலை: பெண்களுக்கு இரவு நேர பணி வழங்க அனுமதி; அரசு முடிவுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

திருமலை: ஆந்திரா மாநிலத்தில் வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பெண்களுக்கு இரவு நேர பணி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம், பாஜ, ஜனசேனா கட்சி கூட்டணிஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஒரு நாளுக்கு 9 மணி நேரம் பணி என்ற விதி அமலில் உள்ளது. இந்த வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்க சந்திரபாபு நாயுடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மாற்றம் முதலீட்டாளர்களையும், தொழிலாளர்களையும் கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் செய்தித்துறை அமைச்சர் பார்த்தசாரதி தெரிவித்தார். முந்தைய சட்டப்படி, பிரிவு 54ன் படி 5 மணி நேர வேலைக்கு 1 மணி நேர ஓய்வு வழங்கப்பட்டது. இப்போது, 6 மணி நேரத்திற்கு ஒரு மணிநேர ஓய்வு வழங்கப்படும். கூடுதலாக, ஒரு தொழிலாளர் ஒரு காலாண்டில் செய்யக்கூடிய ஓவர்டைம் 75 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள், முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும், தொழிலாளர் நலனுக்கு உகந்த வகையிலும் இருக்குமென அரசு விளக்கம் அளித்துள்ளது. உலகளாவிய தொழில் சூழலுக்கு ஏற்பவே இந்த மாற்றங்கள் எனவும் கூறப்படுகிறது.பொதுவாக தடை செய்யப்பட்டிருந்த பெண்கள் இரவுநேர பணிக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் இருந்தால், பெண்கள் இரவுநேர ஷிப்ட்களில் பணியாற்றலாம். இது பெண்கள் முன்னேற்றத்தையும் பாலின சமத்துவத்தையும் ஊக்குவிக்கும் என அமைச்சர் பார்த்தசாரதி கூறினார். ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.